ஆந்திர மாநிலம் ஏலூரு மாவட்டம் சிந்தலபூடியில் உள்ள அரசு எஸ்சி மாணவிகள் விடுதியில் (SC Girls Hostel), வார்டனின் மனிதநேயமற்ற அராஜகச் சம்பவம் வெளிவந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விடுதியில் எட்டாம் வகுப்பு படித்து வரும் ‘அக்சயா’ என்ற மாணவி, குளிர் தாங்காமல் வார்டனிடம் தனக்குப் படுக்க ஒரு துப்பட்டி (போர்வை) கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வார்டன், அந்தச் சிறுமியைக் கடுமையாகக் கண்டித்ததோடு மட்டுமல்லாமல், நள்ளிரவு 10 மணி என்றும் பாராமல் உடனடியாக ஹாஸ்டலை விட்டு வெளியேறுமாறு கட்டாயப்படுத்தித் துரத்தியடித்துள்ளார்.

​நள்ளிரவில் தன் மகள் ஹாஸ்டலில் இருந்து விரட்டப்பட்ட தகவலை அறிந்து பதறிப்போன பெற்றோர்கள், அலறியடித்துக் கொண்டு ஓடிவந்து அழுதுகொண்டிருந்த தங்களது மகளை மீட்டுக் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். மாணவர்களின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக விளங்கும் இந்த வார்டனின் அராஜகப் போக்கைக் கண்டித்துள்ள சமூக ஆர்வலர்களும் பெற்றோர்களும், உயர் அதிகாரிகள் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, சம்பந்தப்பட்ட வார்டன் மீது கடுமையான சட்டப் பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தீவிரமாக வலியுறுத்தி வருகின்றனர்.