தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தித் தொடர்ந்து போராடி வரும் நிலையில், ஆசிரியர் கண்ணன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துயரச் சம்பவத்திற்குத் தமிழக வெற்றி கழகத்தின் (TVK) தலைவர் விஜய் தனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பகுதி நேர ஆசிரியர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் காலம் கடத்தி வரும் திமுக அரசே இந்த மரணத்திற்குப் பொறுப்பேற்க வேண்டும்” எனச் சாடியுள்ளார்.
தேர்தல் வாக்குறுதியில் ‘பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்’ என்று கூறிவிட்டு, ஆட்சிக்கு வந்த பிறகு அவர்களைப் புறக்கணிப்பது ஏன்? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒரு ஆசிரியரைத் தற்கொலை வரை தள்ளியது திராவிட மாடல் ஆட்சியின் தோல்வி என விமர்சித்துள்ள அவர், உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்குத் தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். விஜய்யின் இந்த அதிரடித் தாக்குதல் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
