அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் தமிழகத்தில் திமுக கூட்டணிக்குள் குழப்பமான சூழல் நிலவுவதாகத் தெரிவித்தார். நெருப்பில்லாமல் புகையாது என்றும் காங்கிரஸ் மற்றும் திமுக இடையிலான உறவு விரைவில் வெட்டவெளிச்சமாகிவிடும் என்றும் அவர் கூறினார்.

வரும் தேர்தலில் அரசு பணத்தை வாரி இறைத்தாலும் தமிழகத்தில் திமுக படுதோல்வி அடைவது உறுதி என்றும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மீண்டும் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளதைக் குறிப்பிட்ட ஜெயக்குமார் நெல்லை இரட்டைக் கொலைச் சம்பவம் மற்றும் போதைப்பொருள் புழக்கத்தால் மாநிலம் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகக் குற்றம் சாட்டினார். சிறுபான்மையின மக்கள் தற்போதைய ஆட்சியில் எந்த நன்மையும் பெறவில்லை என்றும் அவர்களின் வாழ்வாதாரம் இந்த ஐந்தாண்டு காலத்தில் உயரவில்லை என்றும் அவர் கூறினார்.

அதிமுக கூட்டணியில் பாஜக இல்லாத நிலையில் சிறுபான்மையின வாக்குகள் சிதறும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் மக்கள் உண்மையை உணர்ந்துள்ளதாகவும் அவர் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.