தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து கடந்த மாதம் இருபதாம் தேதி முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. தற்போது அமைச்சர்களாகவும் சட்டமன்ற உறுப்பினர்களாகவும் இருப்பவர்கள் மீண்டும் அதே தொகுதிகளில் போட்டியிட ஆர்வத்துடன் மனு அளித்து வருகின்றனர்.

நாளை மறுநாளுடன் மனுத் தாக்கல் செய்யக் கடைசி நாள் என்பதால் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கட்சியினரின் கூட்டம் இன்று அலைமோதியது. அமைச்சர்களின் வாரிசுகள் பலரும் போட்டியிட விருப்ப மனு அளித்து வரும் நிலையில் புதிதாகப் பலரும் இந்த முறை களமிறங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் வீரபாண்டிய கட்டபொம்மனின் எட்டாவது வாரிசு என்று கூறப்படும் இளைய கட்டபொம்மன் என்பவர் நேற்று அண்ணா அறிவாலயத்திற்கு வந்து இரண்டு விருப்ப மனுக்களை வழங்கினார். கட்டபொம்மன் வேடமிட்ட ஒருவரைத் தன்னுடன் அழைத்து வந்த அவர் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெயரிலும் திருத்தணி தொகுதியில் தனது பெயரிலும் மனுக்களை அளித்தார்.

விடுதலைப் போராட்ட வீரரின் வாரிசு ஒருவர் இவ்வாறு வந்து விருப்ப மனு அளித்த சம்பவம் அறிவாலய வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.