தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சீட் கிடைக்காத காரணத்தால் அதிருப்தியில் இருக்கும் முக்கிய நிர்வாகிகளைச் சமாதானப்படுத்தும் அதிரடி நடவடிக்கையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS) மிகத் தீவிரமாக இறங்கியுள்ளார். அந்த வகையில், வரும் தேர்தலில் விருதுநகர் தொகுதியை மிகவும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுக்கு இந்த முறை போட்டியிட சீட் வழங்கப்படவில்லை.

அவருக்குச் சீட் கிடைக்காமல் போனதற்குப் பின்னால் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் அரசியல் காய்நகர்த்தல்கள்தான் முக்கிய காரணம் என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் பலமாக எழுந்தது. இதனால் கடும் அதிருப்தியடைந்த மாஃபா பாண்டியராஜன், அதிமுகவிலிருந்து விலகி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணையக்கூடும் என்ற பரபரப்பு தகவல் தீயாய் பரவியது.

​இந்த விவகாரத்தை உடனடியாகக் கையில் எடுத்த எடப்பாடி பழனிசாமி, மாஃபா பாண்டியராஜன் கட்சி மாறுவதைத் தடுத்து நிறுத்த ஒரு மாஸ்டர் பிளானைப் போட்டுள்ளார். அதன்படி, கட்சியின் மிக முக்கிய பொறுப்பான ‘அமைப்பு செயலாளர்’ பதவியை மாஃபா பாண்டியராஜனுக்கு வழங்கி, அவரை அதிமுகவிலேயே தக்கவைத்துக் கொள்ளும் வகையில் இபிஎஸ் சமாதானம் செய்துள்ளார்.

தேர்தல் நேரத்தில் அதிருப்தி தலைவர்கள் மாற்று முகாமிற்குச் செல்வது கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால், அவர்களுக்குப் பெரிய பொறுப்புகளை வாரி வழங்கி எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வரும் இந்தச் சமாதான உத்தி தற்போது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.