கவுகாத்தியில் உள்ள புகழ்பெற்ற காமாக்யா தேவி கோயிலில் நடைபெற்று வரும் அம்புபாச்சி திருவிழாவின் போது, ஒரு இளம் தம்பதியினரை அங்கிருந்த கூட்டத்தினர் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவிழா கூட்டத்தில் சிக்கித் தவித்த அந்தப் பெண்மணிக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், அந்தத் தம்பதியினர் கூட்டத்திலிருந்து வெளியேறச் சுவரின் மீது ஏறிச் செல்ல முயன்றனர். அப்போது, அங்கிருந்த சிலர் அந்தத் தம்பதியினர் மீது தண்ணீர் பாட்டில்களை வீசியும், தண்ணீர் தெளித்தும் அநாகரிகமாக நடந்துகொண்டனர்.

இதில் ஒரு பாட்டில் அந்தப் பெண்ணின் தலையில் பலமாகப் பட்டதால் அவர் கீழே அமர்ந்துவிடுகிறார். இந்தச் சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி, மக்களின் இத்தகைய பொறுப்பற்ற செயலுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட அந்த இளைஞர் விளக்கம் அளித்துள்ளார். நான் அந்தப் பெண்ணின் கணவர் என்றும், திருவிழா கூட்டத்தில் மனைவியின் உடல்நிலை மோசமடைந்ததால் வேறு வழியின்றிதான் கூட்டத்திலிருந்து விலகிச் சுவரின் மீது ஏறினோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இருப்பினும், இந்த இக்கட்டான சூழலில் தம்பதியினருக்கு உதவியிருக்க வேண்டிய மக்கள், அவர்கள் மீது தாக்குதல் நடத்தியது மிகுந்த வேதனையை அளிப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

“>

 

இந்த அநாகரிகமான செயல் குறித்து அரசு அல்லது கோயில் நிர்வாகம் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. புனிதமான திருவிழாக்களில் இத்தகைய வன்முறைச் செயல்கள் நடைபெறுவது பக்தர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.