ஜோத்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில், 20 வயது இளம்பெண் ஒருவரின் வயிற்றில் இருந்து 62 சென்டிமீட்டர் நீளமுள்ள ராட்சத தலைமுடிப் பந்தை மருத்துவர்கள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுத்துள்ளனர். அந்தப் பெண்ணுக்கு நீண்ட நாட்களாகக் கடுமையான வயிற்று வலியும், பசியின்மையால் தொடர்ந்து உடல் எடையும் குறைந்து வந்துள்ளது. இதையடுத்து அவரைப் பரிசோதித்த எய்ம்ஸ் மருத்துவக் குழுவினர், அவரது வயிற்றில் ‘டிரைகோபெஸார்’ எனப்படும் விழுங்கப்பட்ட தலைமுடியின் திரண்ட கட்டி இருப்பதைக் கண்டறிந்தனர்.
இந்த அரிய மருத்துவக் கட்டியானது பெண்ணின் வயிறு மட்டுமின்றி, அவரது சிறுகுடலின் மேல் பகுதி வரை நீண்டு வளர்ந்து குடல் அடைப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்தச் சிக்கலான ஆபரேஷனுக்குப் பிறகு அந்தப் பெண் தற்போது நலமுடனும், வேகமாக குணமடைந்தும் வருவதாக மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்துள்ளது.
बाल निगलने की आदत से उत्पन्न दुर्लभ बीमारी #रैपुंजेल_सिंड्रोम के एक जटिल मामले में एम्स जोधपुर के चिकित्सकों ने 20 वर्षीय युवती के पेट से 62 सेंटीमीटर लंबा ट्राइकोबेज़ोअर (बालों का विशाल गुच्छा) सफलतापूर्वक निकाला।
यह उपलब्धि एम्स जोधपुर की उन्नत शल्य चिकित्सा एवं बहुविषयक… pic.twitter.com/g1wJr8m0SE
— AIIMS Jodhpur (@aiims_jodhpur) June 26, 2026
மருத்துவத்துறையில் இந்த அரிய பாதிப்பானது ‘ரபுன்செல் சிண்ட்ரோம்’ (Rapunzel Syndrome) என்று அழைக்கப்படுகிறது. இது உலக அளவில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான நபர்களுக்கே ஏற்படும் ஒரு மிக அரிய நோயாகும். பொதுவாக, சொந்த முடியையே தாங்களாகவே மீண்டும் மீண்டும் பிடுங்கும் ‘டிரிகோடிலோமேனியா’ மற்றும் அவ்வாறு பிடுங்கும் முடியை மென்று விழுங்கும் ‘டிரிகோபேஜியா’ போன்ற தீவிர மனநலப் பாதிப்பு உள்ளவர்களுக்கே இந்த நிலை ஏற்படுகிறது.
மனித உடலால் தலைமுடியை ஜீரணிக்க முடியாது என்பதால், வருடக் கணக்கில் வயிற்றில் சேரும் முடி, ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து இப்படிப்பட்ட ராட்சதப் பந்தாக மாறிவிடுகிறது. இதனை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்காவிட்டால் குடலில் புண், கடுமையான ரத்தப்போக்கு மற்றும் குடல் கிழிந்து மரணம் ஏற்படும் அபாயமும் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். எனவே, வயிற்றில் கட்டி, காரணமில்லாத உடல் எடை குறைவு போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
