மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே, சாலையில் இருந்த கொடூரமான பள்ளத்தால் 11 வயது சிறுவன் ஐச்சர் டிரக் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

இருசக்கர வாகனத்தில் சென்றபோது, சாலையில் இருந்த எதிர்பாராத பள்ளத்தில் வாகனம் நிலைதடுமாறி விழுந்ததில் பின்னால் அமர்ந்திருந்த சிறுவன் நிலைதடுமாறி சாலையில் தூக்கி வீசப்பட்டான். அப்போது அதே திசையில் பின்னால் வந்த அதிவேக ஐச்சர் டிரக்கின் சக்கரத்தில் சிறுவன் சிக்கி, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தான்.

இந்த நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகளின் அலட்சியத்தாலும் பராமரிப்பற்ற சாலைகளாலும் ஒரு பிஞ்சு உயிர் பலியான இந்தச் சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் ஆத்திரத்தையும் வேதனையையும் கிளப்பியுள்ளது.

சாலையில் உள்ள அபாயகரமான பள்ளங்களை நீண்ட நாட்களாகச் சீரமைக்காமல் விட்டதே இந்த விபத்திற்கு முதன்மை காரணம் எனப் பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர். விபத்து நடந்த சில நொடிகளிலேயே அந்த இடமே சோகமயமானது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், சிறுவனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு, விபத்தை ஏற்படுத்திய டிரக் ஓட்டுநரைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சாலைப் பராமரிப்பில் நடக்கும் முறைகேடுகளும் நிர்வாகத்தின் மெத்தனப் போக்குமே இதுபோன்று அப்பாவி மக்களின், குறிப்பாகச் சிறுவர்களின் உயிரைப் பறிப்பதற்கு முக்கியக் காரணமாக அமைகிறது எனப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ‘இன்னும் எத்தனை உயிர்களை இந்தச் சாலைப் பள்ளங்கள் பலிவாங்கப் போகின்றன?’ என்ற ஆவேசமான கேள்விகள் சமூக வலைதளங்களில் புயலாய்ப் வீசி வருகின்றன.

ஒரு குடும்பத்தின் எதிர்கால நம்பிக்கையாக இருந்த 11 வயது சிறுவனின் உயிர் பறிபோன இந்தத் துயரச் சம்பவம், சாலை உள்கட்டமைப்பு மற்றும் பராமரிப்பில் உடனடியாகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதை மீண்டும் ஒருமுறை உரக்க உணர்த்தியுள்ளது.

“>