ஏற்பாடு செய்யப்பட்ட திருமணத்தில் தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவம் குறித்து நபர் ஒருவர் இணையத்தில் பகிர்ந்த பதிவு பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. திருமணத்திற்கு முன்பு 8 மாதங்கள் காதலித்து பழகியபோதிலும், முதலிரவு அன்றே தனது மனைவிக்குத் தன்னைப் பிடிக்கவில்லை என்றும், பெற்றோர் மிரட்டியதாலேயே இந்தத் திருமணத்திற்குச் சம்மதித்ததாகவும் மனைவி கூறியதாக அவர் தெரிவித்துள்ளார்.

உடலளவிலான நெருக்கத்திற்கு மனைவி சம்மதித்தாலும், அதை விருப்பமில்லாமல் செய்வதாக உணர்ந்த கணவர் அதை நிராகரித்துள்ளார். இறுதியில் இருவரும் பரஸ்பரம் பிரிந்து விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தனர். ஆனால் சமுதாயத்தின் எதிர்பார்ப்பிற்காகத் திருமணம் செய்துகொண்ட தனக்கு, திருமணம் முறிந்த பிறகு அதே சமுதாயம் எந்த உதவியும் செய்யவில்லை என அந்த நபர் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவாகரத்து நடைமுறை முடிவடைய இரண்டு ஆண்டுகள் ஆனதாகவும், ஜீவனாம்சமாக ₹10 லட்சம் வரை செலவானதாகவும் அந்தப் பதிவர் தெரிவித்துள்ளார். இதனால் தனது பணமும் நேரமும் வீணானதோடு, மீண்டும் ஒரு நல்ல வாழ்க்கையைத் தொடங்குவதிலும் வரன் அமைவதிலும் தனக்குப் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அவர் வருத்தத்துடன் கூறியுள்ளார்.

இணையத்தில் வைரலான இந்தச் செய்திக்கு ஏராளமான பயனர்கள் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். சிலர் தாங்கள் கேள்விப்பட்ட இது போன்ற போலி திருமணங்கள் மற்றும் கள்ளத் தொடர்புகளால் வாழ்க்கையைத் தொலைத்த மனிதர்களின் கதைகளைப் பகிர்ந்து ஆதரவு தெரிவித்தனர்.

“>

அதேநேரத்தில் சிலர், “உடலளவிலான தொடர்பு இல்லாதபட்சத்தில் விவாகரத்திற்குப் பதிலாகத் திருமண ரத்து செய்திருக்கலாம்” எனச் சட்டப்பூர்வ ஆலோசனைகளை வழங்கினர். எது எப்படியோ, அவசரப்பட்டு செய்யப்படும் திருமணங்களும், விருப்பமில்லாத கட்டாயத் திருமணங்களும் இருவரின் வாழ்க்கையையும் எவ்வாறு சீரழிக்கிறது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சான்றாக மாறியுள்ளது.