கேரள மாநிலம் பரசால தொகுதி எம்.எல்.ஏ. சி.கே. ஹரீந்திரன், சட்டமன்றத்தில் பட்ஜெட் விவாதத்தின் போது தூங்குவது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
நான் கடந்த ஒரு வாரமாக டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், உடல்நிலை முழுமையாகக் குணமடையாத நிலையிலும் மக்களின் பிரதிநிதியாகத் தனது கடமையைச் செய்ய வேண்டும் என்பதற்காகவே பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மருத்துவர்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்திய போதிலும், தனது தொகுதிப் பிரச்சினைகளை அவையில் பேச வேண்டும் என்ற பொறுப்புணர்வால் தான் அங்கு வந்ததாக அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சட்டமன்ற நடவடிக்கைகள் பல மணி நேரம் நடைபெற்ற நிலையில், அதில் சில வினாடிகளை மட்டும் வெட்டி, தான் தூங்குவதாகத் தவறான பிம்பத்தை உருவாக்குவது மலிவான அரசியல் பிரசாரம் என்று அவர் சாடியுள்ளார். காய்ச்சலுக்குப் பிந்தைய உடல் சோர்வு என்பது இயல்பான ஒன்று என்றும், இதைப் புரிந்து கொள்ளாமல் தனது உடல்நலக் குறைவை அரசியல் தாக்குதலுக்குப் பயன்படுத்துவது வருத்தமளிப்பதாக அவர் கூறியுள்ளார்.
மக்கள் பிரதிநிதிகளை விமர்சிப்பது ஜனநாயகத்தில் தவறில்லை, ஆனால் உண்மைகளை ஆராயாமல் ஒருவரின் உடல்நலக் குறைவை வைத்து அரசியல் செய்வது அரசியல் கலாச்சாரத்திற்கு அழகல்ல என்று அவர் தெரிவித்துள்ளார். தன்னைச் சுற்றியுள்ள விமர்சனங்களை மீறி, தனது தொகுதி மக்களுக்காகத் தொடர்ந்து நேர்மையுடன் பணியாற்றுவேன் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
