ராஜஸ்தான் மாநிலம் துங்கர்பூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையம் ஒன்றில், புகார் அளிக்க வந்த முதியவர் ஒருவரை அவமதிக்கும் வகையில் பெண் காவலர் ஒருவர் நடந்துகொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவல் நிலையத்திற்குள் புகார் அளிக்க வந்த முதியவர் காத்திருக்க, பெண் காவலர் ஒருவர் தனது கால்களை மேசையின் மீது வைத்துக்கொண்டு அலட்சியமாக அமர்ந்திருக்கும் காட்சிகள் அந்தப் படத்தில் பதிவாகியுள்ளன.

மக்களின் பாதுகாப்பு மற்றும் சேவைக்காக இருக்கும் காவல்துறை, முதியவர் ஒருவரின் குறையைக் கூடக் கேட்காமல் இவ்வாறு அலட்சியமாகச் செயல்பட்டது பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி, காவல்துறைக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து, சம்பந்தப்பட்ட பெண் காவலரின் செயலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்த உயர் அதிகாரிகள், அவர் மீது உடனடி நடவடிக்கை எடுத்துப் பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.

மேலும், அவர் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் காவல்துறை பணியாளர்கள் பொதுமக்களிடம் கண்ணியமாகவும், பொறுப்புடனும் நடந்துகொள்ள வேண்டும் என்பதை மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளது.