தமிழ் திரையுலகில் ‘திரைக்கதை மன்னன்’ என்று ஒட்டுமொத்த ரசிகர்களாலும் கொண்டாடப்படும் மூத்த இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ் மாரடைப்பு காரணமாகச் சென்னையில் இன்று காலமானார். இயக்குநர் இமயம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகவும், சிறந்த கதாசிரியராகவும் தன் சினிமா பயணத்தைத் தொடங்கி, பின்னர் அவராலேயே நடிகனாகத் திரைத்துறைக்கு அறிமுகம் செய்யப்பட்டவர். பிரம்மாண்டங்களோ, அதிரடிச் சண்டைக் காட்சிகளோ இல்லாமல், மிகச் சாதாரண மனிதர்களின் வாழ்வியலைத் தனது தனித்துவமான பாணியில் சுவாரசியமாகத் திரையில் கொண்டு வருவதில் இவர் கில்லாடி. இவரின் அசாத்திய திரைக்கதை உத்திகள், இன்றுவரை பல இளம் இயக்குநர்களுக்குச் சிறந்த பாடப்புத்தகமாக விளங்கி வருகின்றன.
இவரது இயக்கத்தில் முதல்முறையாக சுவர் இல்லாத சித்திரங்கள் திரைப்படம் வெளிவந்தது. பின்னர் ஒரு கை ஒரு ஓசை திரைப்படம் முதல் இது நம்ம ஆளு உள்ளிட்டப ல திரைப்படங்களை இயக்கியுள்ளார். மேலும் பல படங்களில் கதாநாயகனாகவும் நடித்து அசத்தியுள்ளார். ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள வெள்ளாங்கோவில் கிராமத்தில் கடந்த 1953 ஆம் ஆண்டு பிறந்தவர் பாக்யராஜ். இவர் 25க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ள நிலையில் 75க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
எம்ஜிஆர் நடிப்பில் பாதியில் கைவிடப்பட்ட அவசர போலீஸ் 100 திரைப்படத்தையும் வெற்றிகரமாக இயக்கியவர். மேலும் இவர் நடிகை பூர்ணிமாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் சாந்தனு மற்றும் சரண்யா ஆகிய இரு குழந்தைகள் இருக்கிறார்கள். இவர்கள் இருவருமே திரைத்துறையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் திரைத்துறையில் தனது 50 ஆண்டுகால கலைப் பயண வெற்றியை நிறைவு செய்த இவர், தீவிர சினிமா இயக்கத்தில் இருந்து சற்று ஒதுங்கியிருந்தாலும், சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில், இன்று திடீரென ஏற்பட்ட கடுமையான மாரடைப்பு காரணமாகத் தனது வீட்டில் சுயநினைவை இழந்துள்ளார். இதையடுத்து பதறியடித்தபடி அவரது குடும்பத்தினர் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர்.
அங்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவர்கள் தீவிரமாகப் போராடிய நிலையிலும், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. திரைக்கதை ஜாம்பவானின் இந்தத் திடீர் மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகினரையும், அவரது ரசிகர்களையும் ஆழ்த்த முடியாத பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
