“மக்களுக்குச் சேவை செய்து வாக்குகளைப் பெறுவதற்குப் பதிலாக, பணம் கொடுத்து வாக்குகளை வாங்கும் ‘பணநாயகம்’ தான் தற்போது நாட்டில் நடக்கிறது” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தவெக தலைவர் விஜய்யின் ஈரோடு பேச்சு குறித்துப் பேசுகையில், “களத்திற்கே வராதவர் களத்தைப் பற்றிப் பேசுவது நகைச்சுவையாக உள்ளது.
அவர் குறிப்பிட்ட பெரியார் என்ற ‘ஈரோட்டு கடப்பாரை’ எப்போதோ துருப்பிடித்துவிட்டது” என அதிரடியாகத் தெரிவித்தார். ஒரு தொகுதி 50 கோடி ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டு நடக்கும் இந்த அரசியல், மக்கள் சேவை கிடையாது; இது வெறும் ‘லாப சேவை’ தான் என்றும் அவர் சாடினார்.
வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் ஒரு கோடி (97 லட்சம்) வாக்குகளை நீக்கியது எப்படி ‘வாக்கு திருத்தம்’ (SIR) ஆகும் என்று கேள்வி எழுப்பிய சீமான், வாக்குகளைக் காப்பாற்றுவதே இப்போது பெரும் போராட்டமாக மாறியுள்ளதாகக் கவலை தெரிவித்தார்.
மேலும், “விஜய்க்கு திமுக மட்டும்தான் எதிரி, ஆனால் எனக்கு திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் என நான்கு பேருமே எதிரிகள்தான்” என்று தனது அரசியல் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசு முறையாகப் பேசித் தீர்வு காணத் தவறிவிட்டதாகவும், இது போன்ற பிரச்சினைகள் தேவையில்லாத பிரிவினையை உருவாக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.
