தவெக தலைவர் விஜய் பேச்சுக்கு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக பதிலளித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜய் இதுவரை எந்த தேர்தலிலும் போட்டியிடாதவர் என கூறினார். சமீபத்தில் செங்கோட்டையன் தவெகவில் இணைந்ததை குறிப்பிட்ட நயினார் நாகேந்திரன், அதனால் விஜய் தேவையற்ற உற்சாகத்தில் பேசுவதாக விமர்சித்தார்.

செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது அவரின் சூழ்நிலை காரணமாகவே என்றும், அவருக்கு வேறு வழியில்லை என்றும் தெரிவித்தார். மேலும், திமுக ஒருபோதும் மக்கள் செல்வாக்குடன் வெற்றி பெற்றது இல்லை என்றும், 1967க்குப் பிறகு எம்ஜிஆர் உயிருடன் இருந்த காலம் முழுவதும் அவரே முதலமைச்சராக இருந்ததாக கூறினார். அதன்பின்னர் அரசியல் சூழல் காரணமாக திமுக ஆட்சிக்கு வந்ததாகவும் தெரிவித்தார். கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் கணக்கு தவறியதால் திமுக ஆட்சிக்கு வந்ததாக கூறிய அவர், தற்போதைய ஆட்சியில் ரூ.50 ஆயிரம் கோடிக்கும் மேல் ஊழல் நடந்துள்ளதாக குற்றம்சாட்டினார்.