நாகை, திருவாரூர் மாவட்டங்களில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திருவாரூர் வந்தார்.
திருவாரூரில் மாலை காட்டூர் கலைஞர் கோட்டத்தில் அமைக்கப்பட்ட சிறுவர் பூங்காவை திறந்து வைத்தார். தொடர்ந்து மறைந்த தி.மு.க. மாநில கலை–இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலாளர் திருவிடம் உருவப்பட திறப்பு விழாவில் பங்கேற்றார். பின்னர் இரவு வேளாங்கண்ணியில் தங்கினார்.
இன்று காலை வேளாங்கண்ணியில் நடைபயிற்சி மேற்கொண்ட அவர், நாகை துறைமுகத்தில் பாய்மர கப்பல் விளையாட்டு பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார். தொடர்ந்து நாகூர் சில்லடி கடற்கரையில் ரூ.2 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட நாகூர் ஹனீபா நூற்றாண்டு பூங்காவை திறந்து வைத்தார்.
பின்னர் நாகை மீன்வள பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நாகூர் ஹனீபா நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு நூற்றாண்டு மலரை வெளியிட்டு, அவரது குடும்பத்தினரை கவுரவித்தார்.
விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், நாகை மாவட்டம் தமக்கு சொந்த ஊருக்கு வந்த உணர்வை தருவதாக கூறினார். நாகூர் ஹனீபா, அண்ணா, கலைஞர் ஆகியோரின் பங்களிப்பு திராவிட இயக்க வளர்ச்சியில் முக்கியமானது என்றும் குறிப்பிட்டார்.
இந்தி திணிப்பை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள் என்றும், மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் மத்திய அரசு இந்தி திணிப்பை கொண்டு வருவதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியாக எதிர்த்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழ்நாடு மதநல்லிணக்கத்திற்கான முன்னுதாரண மாநிலம் என்றும், 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
