திமுகவின் மிக முக்கிய மூத்த தலைவர்களில் ஒருவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த், தமிழக வெற்றிக் கழகத்தில் (TVK) இணைய உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போதைய ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது.

கடந்த சில தினங்களாகவே சமூக வலைத்தளங்களில் இந்த விவகாரம் தீயாய் பரவி வரும் நிலையில், இதுவரை ஜெகத்ரட்சகன் தரப்பிலிருந்தோ அல்லது அவரது மகன் சந்தீப் ஆனந்த் தரப்பிலிருந்தோ இதற்கு எந்தவொரு அதிகாரப்பூர்வ மறுப்பும் தெரிவிக்கப்படவில்லை. இந்த மௌனம் அரசியல் வட்டாரத்தில் பல்வேறு சந்தேகங்களையும், எதிர்பார்ப்புகளையும் மேலும் வலுப்படுத்தியுள்ளது.

​சமீபகாலமாக மாற்றுக்கட்சியினரைத் தங்கள் பக்கம் இழுக்க திமுக தலைமை தீவிரமாக முயன்று வரும் வேளையில், தங்களது சொந்த கட்சியின் முக்கிய புள்ளியின் வாரிசே தவெக-விற்குத் தாவ உள்ளதாக வரும் தகவல்கள் திமுக மேலிடத்திற்குப் பலத்த அதிர்ச்சியை அளித்துள்ளதாம்.

நிலைமை கைமீறிப் போவதைத் தடுக்க, சந்தீப் ஆனந்தை சமாதானப்படுத்தி திமுகவிலேயே தக்க வைப்பதற்காக ஒருபுறம் தீவிர ரகசிய பேச்சுவார்த்தைகள் மற்றும் தூது விடும் படலங்கள் விறுவிறுப்பாக நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த அதிரடி அரசியல் நகர்வு சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.