புதிய நிறுவனங்களைத் தொடங்கும் இளம் தொழில்முனைவோர், அனைத்தையும் முழுமையாகத் திட்டமிட்ட பிறகே களத்தில் இறங்க வேண்டும் என்று நினைப்பது இயல்பு. ஆனால், உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ‘பெர்ப்ளெக்சிட்டி’ நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அரவிந்த் ஸ்ரீநிவாஸ், இந்த அணுகுமுறை ஸ்டார்ட்அப் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் என்று கூறுகிறார்.
ஆராய்ச்சித் துறையில் எல்லா விவரங்களையும் சிந்தித்துச் செயல்படுவது சரியாக இருக்கலாம், ஆனால் தொழில் முனைவோர் உலகில் சிந்திப்பதில் மட்டுமே நேரத்தைச் செலவிடுவது முன்னேற்றத்தைத் தடுத்துவிடும்.
அரவிந்த் ஸ்ரீநிவாஸின் கருத்துப்படி, “செயல்படும்போதுதான் உண்மையான தகவல்கள் கிடைக்கும்”. ஒரு பொருளை 100 சதவீதம் குறையில்லாமல் உருவாக்க மாதக்கணக்கில் காத்திருப்பதை விட, 70 அல்லது 80 சதவீதம் தயாரான நிலையிலேயே பயனாளர்களிடம் கொண்டு செல்வது சிறந்தது.
பயனாளர்கள் தரும் கருத்துகளின் அடிப்படையில் அந்தத் தயாரிப்பைத் தொடர்ந்து மேம்படுத்துவதே ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனத்தை வேகமாக வளர்க்க உதவும். இந்த வேகமும், களத்தில் இறங்கிச் செயல்படும் துணிச்சலுமே பெர்ப்ளெக்சிட்டியின் வெற்றிக்கு மிக முக்கியக் காரணமாக அமைந்திருக்கிறது.
