ஆப்கானிஸ்தானில் 2021-இல் அமெரிக்கப் படைகள் வெளியேறிய பிறகு, தலிபான் ஆட்சி பொறுப்பேற்றது. அதன்பின், பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமைகள் முற்றிலும் பறிக்கப்பட்டு வருகின்றன.
பெண்கள் கல்வி கற்பது, வேலை செய்வது, வெளியே செல்வது ஆகியவற்றுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பெண்களின் உரிமைகள், பாலினம் போன்றவை குறித்து பெண்கள் எழுதிய புத்தகங்கள் பல்கலைக்கழகப் பாடங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
தலிபானின் புதிய கல்விச் சட்டம், ஷரியா சட்டத்துக்கு எதிரானவை என்று கூறி, பெண்கள் எழுதிய 140 புத்தகங்களையும், ஈரானிய எழுத்தாளர்களின் 310 புத்தகங்களையும் உள்ளடக்கிய மொத்தம் 680 புத்தகங்களுக்கு தடை விதித்துள்ளது.
இந்தத் தடை, தலிபானின் கொள்கைகளுக்கு முரணாக உள்ளதாகக் கருதப்படும் புத்தகங்களை அகற்றுவதற்காக அமல்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, பெண்கள் எழுதிய புத்தகங்கள் பல்கலைக்கழகப் பாடத்திட்டங்களில் இடம்பெறுவது தடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர, ஆப்கானிஸ்தானின் ஆறு மாகாணங்களில் பைபர் ஆப்டிக் இணைய சேவைக்கும் தலிபான் அரசு சமீபத்தில் தடை விதித்துள்ளது.
இந்த நடவடிக்கைகள், ஆப்கானிஸ்தானில் பெண்களின் கல்வி மற்றும் சுதந்திரத்தை மேலும் பறிக்கும் முயற்சியாக விமர்சிக்கப்படுகிறது.
