காட்டில் ஒவ்வொரு நாளும் பல்வேறு வேட்டைகள் நிகழ்கின்றன. பெரும்பாலும் பலவீனமான விலங்குகள் வேட்டையாடப்படும் நிலை ஏற்பட்டாலும், சில தருணங்களில் தப்பிக்கும் போராட்டம் வியப்பையும், நெகிழ்ச்சியையும் ஏற்படுத்துகிறது. அந்தவகையில், ஒரு வரிக்குதிரை முதலைகளின் பிடியிலிருந்து தப்பிய அதிர்ச்சி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. இது பார்வையாளர்களை உற்றுப் பார்க்க வைத்ததுடன், வரிக்குதிரையின் தைரியத்திற்கு பெரும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

இந்த வீடியோ, @AMAZlNGNATURE என்ற எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்டது. 37 வினாடிகள் கொண்ட இந்தக் காணொளி இதுவரை 2.81 லட்சம் முறைக்கு மேல் பார்க்கப்பட்டுள்ளதுடன், 4,000-க்கும் மேற்பட்டோர் லைக் செய்து பல்வேறு கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். வீடியோவில், ஒரு நதியின் நடுவில் சிக்கியுள்ள வரிக்குதிரை ஒன்று தன்னைத் தாக்கும் பல முதலைகளிடமிருந்து தப்பிக்க போராடுகிறது.

 

ஒன்றுக்கு மேற்பட்ட முதலைகள் அதனைச் சுற்றி வளைத்து தாக்குகின்றன. ஒன்று வாயைப் பிடிக்க, மற்றொன்று பின்னால் இருந்து குத்துகின்றது. இத்தகைய கடுமையான சூழ்நிலையிலும், வரிக்குதிரை தன் தைரியத்தையும், உறுதியையும் இழக்காமல் முதலைகளுடன் பலமுறை சண்டையிட்டு, இறுதியில் தப்பி உயிரைக் காப்பாற்றுகிறது.

மேலும் இந்த வீடியோவினைப் பார்த்த ஒருவர், “இதுதான் உயிர்வாழும் உண்மையான விருப்பம்” எனக் கூற, மற்றொருவர், “கடைசி மூச்சுவரை தைரியத்தைஒருபோதும் கைவிடக்கூடாது என்பதை வரிக்குதிரை எடுத்துக் காட்டியது” எனக் குறிப்பிட்டுள்ளார்.