பொதுவாக பாம்பு என்றாலே பலர் பயந்து ஓடிவிடுவர். ஆனால், அணில் ஒன்று பாம்பை நேரடியாக தாக்கி, அதை கொன்று சாப்பிடும் வீடியோ ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த அதிர்ச்சி வீடியோ “அணில் ஒரு பாம்பைக் கொன்று பின்னர் அதை சாப்பிடுகிறது” என்ற தலைப்புடன் எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்டு, இதுவரை 29,000-க்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது. நூற்றுக்கணக்கானோர் இதைப் பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கி, பலவிதமான கருத்துக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

வீடியோவில், உலர்ந்த இலைகளுக்குள் ஒரு பாம்பு நகரும் காட்சி முதலில் தெரிகிறது. அங்கு திடீரென ஒரு அணில் தோன்றி, அந்த பாம்பைத் தாக்கி, சிறிது நேரத்தில் அதை வென்று, பின்னர் உயிருடன் மெல்லத் தொடங்குகிறது. இதைப் பார்த்த பலரும், “இது நம்பமுடியாத தருணம்!” என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

 

இதுவரை அணில்கள் அமைதியான, அப்பாவி உயிரினங்களாகவே கருதப்பட்டன. ஆனால், இந்த வீடியோவில் அதன் வேறு ஒரு தன்மையைப் பார்க்க முடிகிறது. இதை பார்த்த ஒருபால் பயனர், “பாம்புகளுக்கு பயப்படுபவர்கள் இனி அணில்களுக்கும் பயப்பட வேண்டிய நேரம் இது,” எனக் குறிப்பிட்டுள்ளார். மற்றொருவர், “இந்த அணிலை ‘காட்டின் சிங்கம்’ என்று அழைக்கவேண்டும்,” எனக் கூறியுள்ளார். மேலும் இது போன்ற நிகழ்வுகள், இயற்கையின் அதிசயங்கள் என்றும், யாரையும் அவர்கள் தோற்றத்தின் அடிப்படையில் மதிப்பீடு செய்யக்கூடாது என்பதையும் தெளிவுபடுத்துகிறது.