புனே அருகே உள்ள வாகோலியில் ‘நவீன குருகுலம்’ என்ற பெயரில் ஆசிரமம் நடத்தி வந்த ராதேஷ்யாம் மிஸ்ரா என்ற போலி சாமியார், தன்னை நாடி வந்த பெண்ணை பல ஆண்டுகளாகச் பாலியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சித்திரவதை செய்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவருடன் உதவியாளர்கள் 7 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 2010-ம் ஆண்டு முதல் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணை மிரட்டி, கணவரை விவரிக்கச் செய்து, அவரை திருட்டுத் தொழிலில் ஈடுபட வைத்ததுடன், மின்சார அதிர்ச்சி கொடுத்தும் கொடூரமாக நடத்தியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆபாச வீடியோக்களைக் காட்டி மிரட்டி, அந்தப் பெண்ணின் குடும்பத்தாரையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இந்த ஆசிரமத்தில் போலீசார் நடத்திய சோதனையில், நிலத்தடி அறையிலிருந்து கணினி, செல்போன்கள், ஹார்ட் டிரைவ்கள் மற்றும் காஸெட்டுகள் எனப் பெருமளவு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், 6.5 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளும் மீட்கப்பட்டுள்ளன. அங்கு கைப்பற்றப்பட்ட மாத்திரைகள் மற்றும் மருந்துகள் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

தற்போது கைதாகியுள்ள 8 பேரும் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த போலி சாமியாரின் பிடியில் இன்னும் பலர் சிக்கியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதால், மக்கள் புகார் அளிக்க காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.