சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒன்றில் பிளஸ் டூ படித்து வரும் மாணவி ஒருவர் நேற்று காலை தன்னுடைய சகோதரனுடன் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு வந்துள்ளார். அவரை பள்ளிக்கூடம் அருகே இறக்கிவிட்டு அவரது சகோதரர் சென்றுவிட்டார். ஆனால் மாணவி பள்ளிக்குச் செல்லவில்லை. இதற்கிடையில் அந்த மாணவி, தன்னுடைய தோழி ஒருவருக்கு போன் செய்து தன்னை 6 பேர் கொண்ட கும்பல் கடத்தியதாகவும், தற்போது அவர்களிடமிருந்து தப்பி பேருந்து நிலையத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதனால் பதறிப் போன தோழி இது குறித்து மாணவியின் உறவினருக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் பள்ளிக்கூடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் அந்த மாணவி அவரது சகோதரருடன் இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்து பள்ளி அருகே இறக்கி விடுவதும் சகோதரர் சென்ற பின்னர் அந்த மாணவி அந்த வழியே வந்த ஒரு தனியார் பேருந்தில் ஏறி சென்றதும் பதிவாகி இருந்தது.

இதனால் அந்த மாணவி கடத்தப்பட்டதாக நாடகமாடியதை காவல்துறையினர் உறுதி செய்தனர். இதை தொடர்ந்து அந்த மாணவியை மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். எதற்காக அவர் அப்படி கூறினார் என்று காவல்துறையின தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.