திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகேயுள்ள கணக்கன்பட்டியில், உடல் நலக்குறைவால் திருமணம் கைகூடாத மகளை கொன்று, தந்தை தற்கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கணக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பழனியப்பன் (55), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி விஜயா (50). இவர்களுக்குக் கார்த்திகா, தனலட்சுமி (23), நல்லசாமி ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர். இதில், கார்த்திகா திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறார். நல்லசாமிக்கும் திருமணம் முடிந்துள்ளது.

தனலட்சுமி உடல் நலக் குறைபாட்டால் திருமணம் கைகூடாத நிலையில், பெற்றோருடன் வீட்டிலேயே வசித்து வந்தார். இவருக்காக வரன்கள் பார்த்தும், உடல்நிலை காரணமாக திருமணம் முடிவடையவில்லை என கூறப்படுகிறது. இதனால் பழனியப்பன் கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், கடந்த ஆகஸ்ட் 9-ஆம் தேதி, பழனியப்பனின் மனைவி விஜயா, மகன் நல்லசாமியுடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்யச் சென்றிருந்தார். அப்போது வீட்டில் பழனியப்பனும், அவரது மகள் தனலட்சுமியும் மட்டும் இருந்தனர்.

திருச்செந்தூரில் இருந்து பலமுறை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்ற விஜயாவுக்கு பழனியப்பன் பதிலளிக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த விஜயா, கணக்கன்பட்டியில் உள்ள உறவினர்களிடம் தகவல் தெரிவித்தார். தகவலின்பேரில் உறவினர்கள் வீட்டுக்கு வந்தபோது, வீடு உள்ள்புறமாக பூட்டியிருந்தது. கதவைத் தட்டி பார்த்தும் திறக்காததால், ஆயக்குடி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

தகவலின் அடிப்படையில் போலீசார் விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, பழனியப்பன் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்த நிலையில் இருந்தார். அருகில் தனலட்சுமியும் இறந்த நிலையில் கிடந்தார். மேலும், தனலட்சுமிக்கு புதிய பட்டுச் சேலை போர்த்தப்பட்டு, திருநீறு, குங்குமம் வைக்கப்பட்டிருந்தது. இது, இறுதிச்சடங்கு நடத்தப்பட்டதைக் குறிப்பது போல் இருந்தது.

இருவரின் உடல்களும் கைப்பற்றப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில், தனலட்சுமி கயிற்றால் இறுக்கி கொல்லப்பட்டதும், பழனியப்பன் தூக்குப்போட்டு தற்கொலை செய்ததும் உறுதி செய்யப்பட்டது.

இது குறித்து போலீசார் தெரிவித்ததாவது:

“மகளின் உடல்நிலை மற்றும் திருமணத் தடை காரணமாக மனமுடைந்த பழனியப்பன், தனது மனைவி மற்றும் மகனைக் கோவிலுக்கு அனுப்பி விட்டு, மகளை கொன்று தானும் தற்கொலை செய்துள்ளார். மகளை கொன்ற பின், இறுதிச்சடங்குச் செய்தும், பின்னர் அதே கயிற்றால் தானும் உயிரை மாய்த்துள்ளார்,” எனக் கூறினர்.

இந்த சம்பவம் கணக்கன்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.