புனே அருகே கூட்டுப் பெயரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வீட்டை விற்பனை செய்ய மனைவி மறுத்ததால், ஆத்திரமடைந்த கணவர் தாக்கியதில் மனைவியின் மூக்கு எலும்பு முறிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் புனே நகரின் கோத்ரூட் பகுதியைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில், அவரது 47 வயது கணவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அதாவது கணவன் – மனைவி இருவரது பெயரிலும் வார்ஜே பகுதியில் உள்ள குடியிருப்பில் ஒரு வீடு உள்ளது. அந்த வீட்டை விற்பனை செய்வது தொடர்பாக இருவருக்கும் இடையே நீண்ட நாட்களாக விவாதம் நடைபெற்று வந்துள்ளது. இந்நிலையில், கடந்த புதன்கிழமை (ஏப்ரல் 15) காலை 8:45 மணியளவில் இது தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அப்போது, வீட்டை விற்பனை செய்வதில் தனக்கு உடன்பாடில்லை என்றும், அதற்கான ஆவணங்களில் தான் கையெழுத்திட மாட்டேன் என்றும் அந்தப் பெண் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மனைவியின் மறுப்பைக் கேட்டு ஆத்திரமடைந்த கணவர், அவரை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், கணவர் தனது வலது கை முட்டியால் மனைவியின் மூக்கின் மீது பலமாக குத்தியுள்ளார். இதில் மூக்கிலிருந்து ரத்தம் கொட்டியதுடன், பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும் மருத்துவப் பரிசோதனையில், குத்திய வேகத்தில் அந்தப் பெண்ணின் மூக்கு எலும்பு முறிந்து இருப்பது உறுதி செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
