லோஹ்காட் கோட்டைப் பகுதியில் ஜூன் 18 அன்று கேதன் விஷால் அகர்வால் என்பவர் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்பட்ட சம்பவம், உண்மையில் ஒரு திட்டமிட்ட கொலை என்பது காவல்துறையின் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

ஆரம்பத்தில் விபத்து என நம்பப்பட்ட இந்த வழக்கில், கேதனின் மனைவி சியா கோயலின் பதில்களில் இருந்த முரண்பாடுகளைக் கண்டறிந்த அவரது சகோதரி, காவல்துறையிடம் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்திய போலீசார், சியா கோயலும் அவரது காதலன் சேதன் சௌத்ரியும் கடந்த ஆறு மாதங்களில் சுமார் 238 மணி நேரம் தொலைபேசியில் பேசியுள்ளதைக் கண்டறிந்தனர்.

இந்தக் கொலைச் சம்பவத்தை மறைக்க, சேதன் சௌத்ரி தனது செல்போனை வேண்டுமென்றே ஒரு கடையில் வைத்துவிட்டு, வேறொரு போனைப் பயன்படுத்தி லோஹ்காட் கோட்டைக்குச் சென்றது டிஜிட்டல் தடயங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டது.

தனது கணவனைக் கொல்வதற்காக சியா கோயல் தீட்டிய அபாயகரமான சதித்திட்டத்தை, செல்போன் அழைப்புப் பதிவுகள் மற்றும் இணைய பயன்பாட்டுத் தரவுகள் மூலம் போலீசார் அம்பலப்படுத்தினர்.

அப்பாவி இளைஞர் கேதனின் மரணத்திற்கு நீதி கோரும் வகையில், சியா கோயல் மற்றும் அவரது காதலன் சேதன் சௌத்ரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.