வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் அரங்கேறியுள்ள கொடூரச் சம்பவம் ஒன்று அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. குடும்பத் தகராறு காரணமாகப் பெண் தலைமைக்காவலர் ஒருவர், அவரது சொந்தக் கணவராலேயே கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் காவல் துறையினரையே உலுக்கியுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தைச் சேர்ந்த பெண் தலைமைக்காவலர் தாமரைச்செல்விக்கும், அவரது கணவர் அரவிந்தனுக்கும் இடையே கடந்த சில நாட்களாகக் குடும்பத் தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்த அரவிந்தன் வீட்டிலிருந்த கத்தியை எடுத்துத் தாமரைச்செல்வியை சரமாரியாகக் குத்தியுள்ளார்.
ரத்த வெள்ளத்தில் சரிந்த தாமரைச்செல்வி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த குடியாத்தம் காவல்துறையினர், உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இக்கொடூரச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
#TVKVijay ஆட்சியில் சட்ட ஒழுங்கை சந்தி சிரிக்க வைத்துள்ளார்கள் . மக்களைக் காக்கும் காவல் அதிகாரி என்ற அச்சம் கூட இல்லாமல் நடுரோட்டில் பெண் போலீஸ் குத்திக்கொலை,
வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியில் தாமரைச் செல்வி என்கிற பெண் தலைமைக் காவலர் குத்திக்கொலை.@DDTamilNews pic.twitter.com/dkYf72pnaC
— LS Bala (@bala_ls) August 13, 2026
மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடிய கணவர் அரவிந்தனைப் போலீசார் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், தற்போது அவரைக் கைது செய்துள்ளனர். குடும்பத் தகராறில் பெண் தலைமைக்காவலரே கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் வேலூர் மாவட்டத்தில் பெரும் சோகத்தையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.
