நியூயார்க்கின் லாங் ஐலேண்டில் பல பெண்களைக் கொன்று குவித்து வந்த தொடர் கொலையாளி ரெக்ஸ் ஹியூர்மனுக்கு, சுஃபோக் கவுண்டி நீதிமன்றம் தொடர்ச்சியான ஆயுள் தண்டனைகளை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

17 ஆண்டுகளாகப் பல பெண்களைக் கடத்திச் சென்று கழுத்தை நெரித்துக் கொன்ற இந்த கொடூரக் குற்றவாளி, மொத்தம் எட்டு பெண்களைக் கொன்றதை ஒப்புக்கொண்டுள்ளார். பல ஆண்டுகளாகச் சிக்காமல் இருந்த இவனை, அவன் சாப்பிட்டுவிட்டு வீசிய பீட்சா துண்டில் இருந்த DNA ஆதாரத்தின் மூலமே போலீசார் அடையாளம் கண்டு கைது செய்தனர்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நீதிமன்றத்தில் தங்கள் வேதனையைப் பகிர்ந்துகொண்டபோது, நீதிபதி இவனை ஒரு கோழை மற்றும் அருவருப்பான மனிதன் என்று கடுமையாகச் சாடினார்.

சிறையில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹியூர்மன், அங்கிருந்தபடி குற்ற நாவல்களைப் படிப்பதையும், பிற கொலையாளிகளுக்குக் கடிதம் எழுதுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தான்.

இப்போது ஒரு ஒப்பந்தத்தின்படி, வருங்காலத்தில் இது போன்ற கொடூரக் குற்றவாளிகளைக் கண்டறிய எஃப்.பி.ஐ அமைப்பின் விசாரணைப் பிரிவுக்கு அவன் உதவ ஒப்புக்கொண்டுள்ளான். பாதிக்கப்பட்ட குடும்பங்களின் கண்ணீரும், இந்த கொடூரனின் வன்முறையும் அமெரிக்காவை மட்டுமல்லாது உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

நீண்ட போராட்டத்திற்குப் பிறகு கிடைத்த இந்தத் தீர்ப்பு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓரளவுக்கு நீதியைப் பெற்றுத் தந்துள்ளதாகக் கருதப்படுகிறது.