மும்பை மாநகரத்தின் லைஃப்லைனான லோக்கல் ரயிலில், பலத்த மழையின் போது கதவை மூடுவது தொடர்பாக ஏற்பட்ட சாதாரண தகராறில், 22 வயது இளம் நபர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்த மும்பை மக்களையும் அதிர வைத்து பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை விரார் பகுதியைச் சேர்ந்த 22 வயதான மயங்க் லோஹார் என்ற வாலிபர், அந்தேரி பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில்  வேலை பார்த்துவிட்டு, திங்கட்கிழமை இரவு வழக்கம்போல் வீட்டிற்குப் புறப்பட்டுள்ளார். இரவு 10:42 மணியளவில் சர்ச்கேட்டில் இருந்து நாலாசோபாரா நோக்கிச் சென்ற ஃபாஸ்ட் லோக்கல் ரயிலின் ஃபர்ஸ்ட் கிளாஸ் (முதல் வகுப்பு) பெட்டியில் அவர் ஏறியுள்ளார்.

அப்போது மும்பையில் கனமழை கொட்டிக் கொண்டிருந்ததால், ரயிலுக்குள் மழைச்சாரல் வராமல் இருக்க, அங்கிருந்த ஒரு சக பயணியிடம் கதவை மூடுமாறு மயங்க் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டு, அது முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த அந்த மர்ம நபர் தனது பாக்கெட்டில் இருந்த கூர்மையான கத்தியை எடுத்து மயங்கின் வயிற்றில் சரமாரியாகக் குத்தியுள்ளார்.

ரத்த வெள்ளத்தில் மயங்க் துடித்த நிலையில், இரவு 11:04 மணிக்கு ரயில் போரிவலி ஸ்டேஷனின் 6-வது பிளாட்பாரத்தை நெருங்கிய போது, அந்த கொலையாளி ஓடும் ரயிலில் இருந்தே குதித்து தப்பியோடிவிட்டார்.

தகவலறிந்து வந்த ஆர்.பி.எஃப் மற்றும் ஜி.ஆர்.பி போலீசார், உயிருக்கு போராடிய வாலிபரை மீட்டு போரிவலி அவசரச் சிகிச்சை பிரிவுக்கும், பின்னர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் கண்டிவாலியில் உள்ள சதாப்தி மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர்; ஆனால், சிகிச்சை பலனின்றி மயங்க் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த ஆண்டில் மேற்கு ரயில்வே நெட்வொர்க்கில் நடக்கும் இரண்டாவது பெரிய கத்திக்குத்துச் சம்பவம் இது என்பதால், ரயில்வே போலீசார் போரிவலி மற்றும் அந்தேரி ரயில் நிலைய சிசிடிவி (CCTV) காட்சிகளைத் தீவிரமாக ஆராய்ந்து, தப்பியோடிய கொலையாளியை வலைவீசித் தேடி வருகின்றனர்.