தென் அமெரிக்க நாடான சிலியின் தலைநகர் சாண்டியாகோவில் உள்ள மார்க்கெட் ஒன்றில், பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட பெண் ஒருவர், திடீரென காவலாளியின் துப்பாக்கியைப் பறித்து நேரடித் தொலைக்காட்சியிலேயே (Live TV) சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்திய அதிரடிச் சம்பவம் உலக அளவில் செம வைரலாகி ஒட்டுமொத்த சோசியல் மீடியாவையும் அதிர வைத்துள்ளது.

அங்குள்ள ‘லோ வாலிடோர்’ (Lo Valledor) என்ற மிகப்பெரிய மொத்த விற்பனைச் சந்தையில் புதிய பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து ‘சிலிவிஷன்’ (Chilevisión) தொலைக்காட்சி குழுவினர் நேரடி ஒளிபரப்புச் செய்து கொண்டிருந்த போது இந்த விபரீதம் அரங்கேறியுள்ளது. கத்தியை மறைத்து வைத்துக் கொண்டு மார்க்கெட்டுக்குள் நுழைய முயன்றதாக 54 வயதான பெண் ஒருவரைப் பாதுகாப்புப் படையினர் பிடித்து விசாரணைக்காக இழுத்துச் சென்ற போது, ஆத்திரமடைந்த அந்தப் பெண் துளியும் எதிர்பார்க்காத நேரத்தில் காவலாளியின் இடுப்பில் இருந்த துப்பாக்கியை அசுர வேகத்தில் பறித்து கண்மூடித்தனமாகச் சுடத் தொடங்கினார்.

இந்தத் திடீர் துப்பாக்கிச் சூட்டில் அங்கிருந்த பாதுகாப்புப் படை அதிகாரி, செய்தி சேகரித்துக் கொண்டிருந்த கேமராமேன் மற்றும் அருகில் நின்ற நபர் என மொத்தம் மூன்று பேர் குண்டடிபட்டும், சில்லுகள் பாய்ந்தும் படுகாயமடைந்தனர்.

இதில் வயிற்றில் குண்டடிபட்ட கேமராமேன் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் உயிராபத்து ஏற்படவில்லை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உடனடியாக அந்தப் பெண்ணை மடக்கிப் பிடித்த போலீசார், அவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

சினிமா பட பாணியில் நடுத்தர வயதுப் பெண் ஒருவர் நேரலையிலேயே துப்பாக்கியால் சுடும் இந்த நெஞ்சைப் பதறவைக்கும் பகீர் வீடியோ, தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி பார்ப்போரை உறைய வைத்துள்ளது.