இந்தியாவின் முன்னணி 5 நட்சத்திர ஹோட்டல்களில் நிலவும் மோசமான சுகாதார சீர்கேடுகள் குறித்து, அற்பிதா என்ற இன்ஸ்டாகிராம் பயனர் வெளியிட்ட வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஹோட்டல்களில் பணிபுரிந்த அனுபவத்தைக் கொண்டு, இந்தியாவின் மிக உயர்தர ஹோட்டல்களை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டு 3 அதிர்ச்சியூட்டும் உண்மைகளைப் பகிர்ந்துள்ளார். முதலாவதாக, அறையை சுத்தம் செய்யும் ஊழியர் ஒருவர், தங்கியிருந்த நபர் பயன்படுத்திய குளியல் துண்டை எடுத்து டாய்லெட் சீட்டைத் துடைத்துவிட்டு, பின்னர் அதை சலவைக்கு அனுப்பியதைக் கண்டு தான் அதிர்ந்ததாகக் கூறியுள்ளார்.

எனவே ஹோட்டல்களுக்குச் செல்லும்போது சொந்தமாகத் துண்டு எடுத்துச் செல்லுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார். இதோடு மட்டுமின்றி, அங்குள்ள பாத்திரங்களைக் கழுவும் இயந்திரங்கள் மிகவும் அழுக்காக இருப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். இயந்திரத்தில் இருந்து வெளிவரும் தட்டுகளில் உணவுக் கழிவுகள் ஒட்டியிருந்தாலும், அதை மீண்டும் கழுவாமல் வெறும் துணியால் மட்டும் துடைத்துவிட்டு மீண்டும் பயன்பாட்டிற்கு வைப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சமையலறையில் வேகவைத்த உருளைக்கிழங்குகள் அழுக்கான தரையில் விழுந்தபோதும், ஒரு செஃப் அதை அப்படியே அள்ளி, மசித்துக் கூழாக்கி  பஃபே விருந்தில் பரிமாறியதையும் தான் பார்த்ததாகக் கூறியுள்ளார். அதிக பணம் செலுத்துவதால் மட்டுமே 5 நட்சத்திர ஹோட்டல்களில் முழுமையான சுகாதாரம் கிடைத்துவிடாது என்பதை இந்தச் சம்பவம் வெளிச்சம்போட்டுக் காட்டியுள்ளது.