சந்தைப்பகுதியில் புகுந்த காளை ஒன்றின் தலையில் எதிர்பாராதவிதமாக தண்ணீர் தொட்டி (Water Tank) சிக்கிக்கொண்டதால், அந்தப் பகுதியே போர்க்களமாக மாறிய காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. சமூக வலைதளங்களில் தினந்தோறும் விசித்திரமான வீடியோக்கள் வெளியாவது வழக்கம். அந்த வகையில், காளை ஒன்று விசித்திரமான முறையில் சிக்கலில் சிக்கி, ஒட்டுமொத்த சந்தையையும் அலறவிட்ட வீடியோ தற்போது பேசுபொருளாகியுள்ளது.
தற்போது வெளியாகியுள்ள வீடியோவில், பிளாஸ்டிக்கால் ஆன சிறிய ரக தண்ணீர் தொட்டி ஒன்று காளையின் தலையில் மாட்டியுள்ளது. இதனால் கண் தெரியாமல் மிரண்ட அந்த காளை, பயத்தில் அங்குமிங்கும் ஓடத் தொடங்கியது. தலையில் மாட்டியுள்ள தொட்டியை எடுக்க முடியாமல் அது திணறியபோது, அருகில் இருந்த கடை படிக்கட்டுகளில் மோதி மேலும் ஆவேசமடைந்தது. காளை சீறிக்கொண்டு வருவதைப் பார்த்த பொதுமக்கள், பயத்தில் தங்களது உயிரைக் காக்க நாலாபுறமும் சிதறி ஓடினர். இதனால் அந்தப் பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
सांड ने अपने सर में फंसा लिया ड्रम लोगों ने बड़ी मुश्किल से निकाला। pic.twitter.com/LNWk5gYO1H
— Ritika (@Ritika_r8) April 14, 2026
நிலைமை மோசமானதைக் கண்டு அங்கிருந்த சில இளைஞர்கள் துணிச்சலுடன் களத்தில் இறங்கினர். ஆவேசமாக ஓடிக்கொண்டிருந்த காளையை மிகவும் சிரமப்பட்டு ஒரு வழியாகச் சூழ்ந்து பிடித்து நிறுத்தினர். அதன் பின்னர், லாவகமாகச் செயல்பட்டு அதன் தலையில் சிக்கியிருந்த தண்ணீர் தொட்டியை அப்புறப்படுத்தினர்.
இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பார்த்த நெட்டிசன்கள், “என்ன நந்தி மகாராஜ்… இப்படிப் பண்ணிட்டீங்களே?” என்று வேடிக்கையாகக் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். அதே நேரத்தில், தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் காளையின் உயிரைக் காப்பாற்றிய இளைஞர்களின் மனிதநேயத்தையும், வீரத்தையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.
