திருமணத்திற்கு இன்னும் சில நாட்களே இருந்த நிலையில், மணமகனின் காதலி, மணப்பெண் மீது ஆசிட் வீசித் தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திரா விஹார் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம்பெண்ணுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் வரும் ஏப்ரல் 19-ஆம் தேதி திருமணம் நடைபெறவிருந்தது. இதனையொட்டி, கடந்த ஏப்ரல் 14-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மணப்பெண்ணின் வீட்டில் மெஹந்தி விழா கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்றது.

மதியம் 12:30 மணியளவில் மெஹந்தி விழா உற்சாகமாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, மணமகனின் காதலி அங்கு வந்துள்ளார். அவர் மணப்பெண்ணின் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் என்பதால், யாருக்கும் சந்தேகம் எழவில்லை. மெஹந்தி வைப்பது குறித்து மணப்பெண்ணுடன் சகஜமாகப் பேசிக் கொண்டிருந்த அவர், திடீரென தான் மறைத்து வைத்திருந்த பாட்டிலைத் திறந்து மணப்பெண்ணின் முகம் மற்றும் உடல் மீது ஆசிட்டை வீசினார்.

ஆசிட் பட்டவுடன் மணப்பெண் வலியால் துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு உறவினர்கள் ஓடி வருவதற்குள், மணப்பெண்ணின் முகம், கண்கள், கழுத்து மற்றும் கைகள் கடுமையாகப் பொசுங்கின. உடனடியாக அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், மணப்பெண்ணின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது ஆசிட் வீசிய இளம்பெண்ணும், மணமகனும் கடந்த ஐந்து ஆண்டுகளாகக் காதலித்து வந்துள்ளனர். தனது காதலன் வேறொரு பெண்ணைத் திருமணம் செய்வதைப் பொறுக்க முடியாமல், மணப்பெண்ணின் வாழ்க்கையைச் சிதைக்கத் திட்டமிட்டு இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளார். ஆசிட் வீசிய பெண்ணை உறவினர்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அவர் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் மகிழ்ச்சியில் திளைத்திருக்க வேண்டிய திருமண வீடு, இந்த விபரீதச் செயலால் தற்போது சோகத்தில் மூழ்கியுள்ளது.