உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில், தேநீர் அருந்திவிட்டு திரும்பிய 29 வயது ரயில்வே ஊழியர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக இளைஞர்கள் மாரடைப்பு மற்றும் இதயக் கோளாறுகளால் திடீரென உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வரிசையில், ஜான்சி ரயில்வே அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்த அஜய் குஷ்வாகா என்ற இளைஞரின் மரணம் தற்போது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜான்சி பகுதியைச் சேர்ந்த அஜய் குஷ்வாகா, தனது தந்தை மறைவுக்குப் பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கருணை அடிப்படையில் ரயில்வேயில் பணியில் சேர்ந்தார். திங்கள்கிழமை மாலை தனது பணியில் இருந்த அஜய், இரவு 7:49 மணியளவில் சித்ரா சௌக் பகுதியில் உள்ள ஒரு உணவகத்திற்கு தேநீர் அருந்தச் சென்றுள்ளார்.

சிசிடிவி காட்சிகளின்படி, அஜய் அமைதியாக தேநீர் அருந்திவிட்டு, அதற்கான பணத்தையும் கொடுத்துள்ளார். பின்னர் அங்கிருந்து கிளம்பும்போது, ஒரு பிளாஸ்டிக் பையை கடைக்காரரிடம் கேட்டுள்ளார். அந்தப் பையை வாங்கும் சில வினாடிகளில், நிலைதடுமாறி அப்படியே தரையில் சாய்ந்தார்.

சம்பவம் குறித்து தகவலறிந்த அவரது குடும்பத்தினர் மற்றும் சக ஊழியர்கள் 10 நிமிடங்களுக்குள் அங்கு விரைந்து வந்து, அவரை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். அஜய் குஷ்வாகாவின் மரணத்திற்கு மாரடைப்பு அல்லது ‘கார்டியாக் அரெஸ்ட்’ (Cardiac Arrest) காரணமாக இருக்கலாம் என்று முதற்கட்டமாக சந்தேகிக்கப்படுகிறது.

இந்தத் துயரச் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தேநீர் அருந்திக் கொண்டிருக்கும் போது ஆரோக்கியமாகத் தென்படும் ஒரு இளைஞர், அடுத்த சில வினாடிகளில் சரிந்து விழுவது பார்ப்பவர்களின் நெஞ்சைப் பதற வைக்கிறது. சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில், “மரணம் நேரத்தைப் பார்த்து வருவதில்லை” எனப் பலரும் தங்களது இரங்கல்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by indori_news (@indoreupdate2026)