சத்ரபதி சம்பாஜிநகர் (முன்பு அவுரங்காபாத்) மாநகராட்சி அலுவலகம் இருக்கும் இடத்தில் ஆவிகள் நடமாட்டம் இருப்பதாக மாநில அமைச்சர் சஞ்சய் சிர்சாத் தெரிவித்துள்ள கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநில அமைச்சரான சஞ்சய் சிர்சாத், மாநகராட்சியில் புதிதாக வாங்கப்பட்ட தீயணைப்பு வாகனத்தைத் தொடங்கி வைக்கும் விழாவில் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்கள் மற்றும் அதிகாரிகளிடையே பேசுகையில் அவர் இந்த அதிரடித் தகவலை வெளியிட்டார்.
அமைச்சர் சஞ்சய் சிர்சாத் பேசியதாவது, தற்போது மாநகராட்சி அலுவலகம் அமைந்துள்ள இடம், முன்பு ஒரு கல்லறையாக இருந்தது. இதன் காரணமாக அந்த இடத்தில் ஆவிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. அங்கு வேலை செய்யும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். அவர்கள் நிம்மதியாகப் பணியாற்ற முடிவதில்லை. இந்தச் சிக்கலில் இருந்து விடுபடவும், நிர்வாகம் சிறப்பாக நடைபெறவும் மாநகராட்சி அலுவலகத்தை வேறு ஒரு நல்ல இடத்திற்கு மாற்ற வேண்டும் என்றார்.
அமைச்சரின் இந்தப் பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மாநகராட்சியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு, மோசமான சாலை வசதிகள் போன்ற அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்கத் துப்பில்லாத அமைச்சர், மக்களின் கவனத்தைத் திசைதிருப்பவே இது போன்ற ‘பகீர்’ கிளப்பும் கதைகளைக் கூறி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளனர். பொறுப்பான பதவியில் இருக்கும் ஒரு அமைச்சரே அறிவியல் ஆதாரமற்ற மூடநம்பிக்கைகளைப் பரப்புவது கண்டிக்கத்தக்கது என சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
மேலும் ஏற்கெனவே பெயர் மாற்ற விவகாரத்தில் அரசியல் சூடுபிடித்துள்ள நிலையில், தற்போது ‘ஆவி நடமாட்டம்’ என அமைச்சர் பேசியிருப்பது அம்மாநில அரசியலில் புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
