மத்தியப் பிரதேசம் போபால் ரயில் நிலையத்தில், வரிசையை மீறி டிக்கெட் வழங்கியதாக எழுந்த புகாரில், ரயில்வே ஊழியருடன் பயணி ஒருவர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. போபால் ரயில் நிலையத்தில் உள்ள முன்பதிவு மையத்தில் வியாழக்கிழமை இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
டிக்கெட் எடுப்பதற்காக நீண்ட நேரமாக வரிசையில் நின்றிருந்த பயணி ஒருவர், ஊழியரின் செயல்பாடுகளால் ஆத்திரமடைந்தார். வரிசையில் நிற்காத ஒருவருக்கு, ரயில்வே பெண் ஊழியர் டிக்கெட் வழங்கியதே இந்த மோதலுக்குக் காரணமாகியுள்ளது. அந்தப் பயணி ஊழியரைப் பார்த்துக் கூறியதாவது, வரிசையில் நிற்பவர்களை விட்டுவிட்டு, இவர்களுக்கு மட்டும் எப்படி முதலில் டிக்கெட் தருகிறீர்கள்? இது உங்களது உடந்தையுடன் நடக்கும் தரகு வேலையா? ஏசி (AC) கவுண்டரிலும் இவர்களுக்குத்தான் முதல் இடம், ஸ்லீப்பர் கவுண்டரிலும் இவர்களுக்குத்தான் முதல் இடமா? பயணிகளை முட்டாள்கள் என்று நினைத்துவிட்டீர்களா?” என்று கேட்டார்.
மேலும், அந்தப் பயணி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தும் போது, “இந்த வீடியோவை ரயில்வே அமைச்சருக்கும், கோட்ட மேலாளருக்கும் (DRM) டேக் செய்வேன்; உங்கள் வேலையே போய்விடும்,” என ஆவேசமாக எச்சரித்தார். பயணியின் இந்த ஆவேசமான கேள்விக்கு அங்கு நின்றிருந்த மற்ற பயணிகளும் ஆதரவு தெரிவித்தனர். டிக்கெட் முன்பதிவில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும், இடைத்தரகர்களின் தலையீடு அதிகளவில் இருப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
View this post on Instagram
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, ரயில்வே நிர்வாகம் இது குறித்துக் கவனத்தில் கொண்டுள்ளது. இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், முறைகேடுகள் ஏதும் நடந்துள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், முதற்கட்டமாக ஊழியர் மீதான குற்றச்சாட்டுகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
