நியூயார்க் நகரில் நடைபெற்ற நிக்ஸ் (Knicks) சாம்பியன்ஷிப் அணிவகுப்பின் போது, பொது இடத்திலிருந்த ஒரு பிரத்யேக நீலம் மற்றும் ஆரஞ்சு நிற குப்பைத் தொட்டியில் இருந்த குப்பைகளை வீதியில் கொட்டிவிட்டு, அந்தத் தொட்டியைத் திருடிச் சென்ற ஜேபி மார்கன் சேஸ் வங்கியின் பெண் இயக்குநர் ஆன்ஜி பேஸ் ( 40) என்பவர் அதிரடியாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். நிக்ஸ் ஆடைகளுடன் இருந்த அவர், குப்பைகளைக் கொட்டிவிட்டு அந்தத் தொட்டியை எடுத்துச் செல்வதும், பின்னர் திருடப்பட்ட அந்தத் தொட்டியுடன் சப்வே ரயிலில் பயணம் செய்வதும் போன்ற வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகின.

நியூயார்க் சட்டப்படி $1,000-க்கு குறைவான மதிப்புள்ள சொத்துக்களைத் திருடுவது சிறு திருட்டுக் குற்றமாகக் (Class A misdemeanor) கருதப்பட்டு, அபராதம் அல்லது சமூக சேவை போன்ற தண்டனைகளுக்கு வழிவகுக்கும் என்றாலும், ஜூன் 20 வரை இது தொடர்பாக காவல்துறைக்கு  எந்தப் புகாரும் வரவில்லை. எனினும், பொதுச் சொத்தைத் திருடிவிட்டு வீதியில் குப்பையைக் கொட்டியது சமூக விரோதச் செயல் என்று நியூயார்க் நகர துப்புரவுத் துறை கண்டனம் தெரிவித்ததைத் தொடர்ந்து, ஜூன் 23 அன்று அந்தப் பெண் ஊழியர் நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஜேபி மார்கன் சேஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

40 வயதான ஆன்ஜி பேஸ், ஜேபி மார்கன் சேஸ் வங்கியில் ‘கார்டு அண்ட் கனெக்டெட் காமர்ஸ்’ பிரிவின் சமூகம் மற்றும் தொழில்துறை ஈடுபாட்டிற்கான நிர்வாக இயக்குநராகப் பணியாற்றி வந்தார். இதற்கு முன்பு, சேஸ் வங்கியால் கையகப்படுத்தப்பட்ட ‘தி இன்ஃபேச்சுவேஷன்’ (The Infatuation) என்ற உணவு ஊடக இணையதளத்தில் பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் உள்ளடக்கம் (DEI) பிரிவின் நிர்வாக இயக்குநராகவும், ஸ்கொயர்ஸ்பேஸ் (Squarespace) மற்றும் சாக்ஸ் ஃபிஃப்த் அவென்யூ (Saks Fifth Avenue) போன்ற முன்னணி நிறுவனங்களிலும் உயர் பதவிகளை வகித்துள்ளார்.

ஊடகத்துறையில் சமத்துவத்தை ஊக்குவிப்பதற்காக ‘சேம் பேஜ் கோ’  என்ற நிறுவனத்தையும் அவர் இணைத் தோற்றுவித்துள்ளார். அவருடைய அதிகாரப்பூர்வ சுயவிவரக் குறிப்புகளில், “சமூகத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துபவர் மற்றும் உள்ளடக்கிய எதிர்காலத்தை நோக்கி வழிநடத்துபவர்” என்று பாராட்டப்பட்டிருந்த நிலையில், தனிப்பட்ட முறையில் அவர் பங்கேற்ற இந்த அணிவகுப்பில் செய்த சட்டவிரோதச் செயலால் தற்போது தனது உயர் பதவியை இழந்துள்ளார்.