செயற்கை நுண்ணறிவு உருவாக்கித் தந்த தீவிரமான டயட் மற்றும் உடற்பயிற்சித் திட்டத்தைப் பின்பற்றி வெறும் 45 நாட்களில் 20 கிலோ எடையைக் குறைத்த சீனாவைச் சேர்ந்த 34 வயது உள்ளடக்கக் படைப்பாளர்  கடுமையான உடல்நலக் குறைவு காரணமாகத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தைச் சேர்ந்த சென் என்ற 34 வயது நபர், சமூக வலைதளங்களில் கன்டென்ட் கிரியேட்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் வழக்கமாக இரவு முழுவதும் விழித்திருப்பது, அதிக கொழுப்பு மற்றும் உப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்வது போன்ற ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையைக் கடைப்பிடித்து வந்துள்ளார். இதன் காரணமாக இவரது உடல் எடை திடீரென 120 கிலோவாக அதிகரித்தது.

எடையைக் குறைக்க விரும்பிய சென், எளிய முறையில் எடையைக் குறைக்க ஒரு ஏஐ  கருவியைத் நாடியுள்ளார். அந்த ஏஐ கருவியும் அவருக்கு ஒரு “அறிவியல் பூர்வமான” எடை இழப்புத் திட்டத்தை வகுத்துக் கொடுத்துள்ளது. அந்த அல்காரிதம் சென்னுக்குப் பரிந்துரைத்த திட்டங்கள் மிகவும் கடுமையானவை, அதாவது தினமும் 90 நிமிடங்கள் மாடிப்படிகளில் ஏறி இறங்கும் பயிற்சி மற்றும் வாரத்திற்கு இருமுறை ஒவ்வொரு முறையும் 2 முதல் 3 மணி நேரம் வரை பேட்மிட்டன் விளையாட வேண்டும். ஆடைகள் முழுவதும் வியர்வையில் நனைந்தாலும் கூட இடையில் ஓய்வெடுக்காமல் தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று அந்த ஏஐ கட்டளையிட்டுள்ளது.

காலை உணவாக இரண்டு முட்டைகள், அரை வேகவைத்த பன் மற்றும் ஒரு கிளாஸ் பால் மட்டுமே. மதிய உணவாக 75 கிராம் மாட்டிறைச்சி மற்றும் 75 கிராம் காய்கறிகள். இரவு உணவாக ஒரே ஒரு கப் யோகார்ட் மட்டுமே அனுமதிக்கப்பட்டது. இந்தக் கடுமையான முறையைப் பின்பற்றியதன் பலனாக, வெறும் 45 நாட்களில் சென் 20 கிலோ எடையை இழந்து 100 கிலோவாகக் குறைந்தார்.

விரைவான எடை இழப்புக்குக் கிடைத்த உற்சாகத்தில் இருந்த சென், ஒரு கட்டத்தில் சாதாரண சளியால் பாதிக்கப்பட்டார். இருப்பினும், தனது வழக்கமான கடுமையான உடற்பயிற்சித் திட்டத்தை அவர் நிறுத்தவில்லை. இதன் காரணமாக அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்தது. மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது அவர் பேசும் திறனை இழந்து குழப்பமான நிலையில் இருந்ததாகவும், சிறிது நேரத்தில் கோமா  நிலைக்குச் சென்றதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மருத்துவப் பரிசோதனைகளில் சென் கடுமையான செப்டிக் ஷாக் மற்றும் பல உறுப்புகள் செயலிழப்பு நிலையால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. “இவரை இன்னும் சில மணி நேரம் தாமதமாகக் கொண்டு வந்திருந்தால் காப்பாற்றியிருக்க முடியாது” என்று சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அதிர்ச்சியுடன் தெரிவித்தனர்.

தீவிர சிகிச்சைப் பிரிவின் துணை இயக்குநர் காவோ லியாங்ஹாய்  கூறுகையில், “சென் ஏற்கனவே நீண்ட நாட்களாகத் தூக்கமின்மையால் அவதிப்பட்டு வந்ததால் அவரது நோயெதிர்ப்பு சக்தி மிகவும் பலவீனமாகியிருந்தது. அதனுடன் இந்தத் தீவிர கலோரி கட்டுப்பாடு அவரது நோய் எதிர்ப்புச் சக்தியை முற்றிலுமாக முடக்கியது. மேலும், கடுமையான உடற்பயிற்சி மற்றும் உணவுத் தவிர்ப்பு காரணமாக ஏற்பட்ட கடுமையான நீரிழப்பு அவருக்கு சிறுநீரகக் கல் தாக்கத்தை ஏற்படுத்தி சிறுநீர் பாதைத் தொற்றாக மாறியுள்ளது. இதுவே அவரது உடல் முழுவதும் நச்சுத் பரவக் காரணமாகிவிட்டது” என்று விளக்கினார்.

மேலும் பேசிய அவர், “ஏஐ-ஆல் கலோரி பற்றாக்குறையைக் கணக்கிட முடியுமே தவிர, மனித உடலின் உண்மையான உடலியல் வரம்புகளை ஒருபோதும் அதனால் மதிப்பிட முடியாது” என்று கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். எந்தவொரு மருத்துவ மேற்பார்வையும் இன்றி சுயமாக இதுபோன்ற ஆபத்தான திட்டங்களைப் பின்பற்றுவது உயிருக்கே ஆபத்தாக முடியும் என்பதை இந்தச் சம்பவம் உணர்த்தியுள்ளது.