பக்தி சிரத்தையுடன் விரதம் இருந்து, செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமியை வழிபடுவதற்கு மிகவும் உகந்த நாள் வரலட்சுமி விரத நாள் ஆகும். வரலட்சுமி என்றால் ‘வரங்களை அருளும் லட்சுமி’ என்று பொருள். இந்த நாளில் மகாலட்சுமியை வழிபடுவதால் வேண்டிய வரங்களைப் பெறுவதுடன், அஷ்டலட்சுமிகளின் பரிபூரண அருளையும் பெறலாம். சுமங்கலி பெண்கள், தங்கள் கணவன் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழவும், வீட்டில் செல்வ வளம் பெருகவும் இந்த விரதத்தை மேற்கொள்கிறார்கள்.
ஒருமுறை மகாலட்சுமி வயதான சுமங்கலிப் பெண் வேடத்தில் பூலோகம் வந்தார். தூங்கிக் கொண்டிருந்தவர்கள், சுத்தமில்லாத வீடுகள் மற்றும் சண்டையிடும் வீடுகளைத் தவிர்த்து, வாசலில் அழகான கோலமிட்டு, பூஜையறையில் விளக்கேற்றி மங்களகரமாக இருந்த ஒரு வீட்டிற்குச் சென்றார். அந்த வீட்டின் உரிமையாளர்கள் அவரை அன்புடன் உபசரித்தனர். திடீரென மறைந்த அந்தப் பெண்மணி, அவர்களின் பூஜையறை முழுவதும் செல்வத்தைக் கொட்டி ஆசீர்வதித்தார். இதிலிருந்தே வரலட்சுமி விரத நாளில் வீட்டைத் தேடி அன்னை வருவாள் என்ற நம்பிக்கை உருவானது.
வரலட்சுமி விரதத்திற்கு முதல் நாளே வீட்டைத் தூய்மை செய்து, அலங்கரிக்க வேண்டும். பூஜை செய்யும் இடத்தில் சிறிய மண்டபம் அமைத்து, அதன் முன்பாகக் கோலமிட வேண்டும். மண்டபத்தில் மகாலட்சுமியின் படம் அல்லது சிலையை வைத்து மலர்களால் அலங்கரிக்க வேண்டும். பின்னர் ஒரு வாழை இலையில் பச்சரிசியைப் பரப்பி, அதன் மீது அரிசி நிரப்பிய கலசத்தை வைத்து, மஞ்சள்குங்குமம் தடவி தேங்காயை வைக்க வேண்டும். இந்தக் கலசத்தையே மகாலட்சுமியாக பாவித்து வழிபட வேண்டும்.
கலசத்தின் அருகில் வெற்றிலை, பாக்கு, பழங்கள், நிவேதனப் பொருட்கள் மற்றும் மஞ்சள் தடவிய ஒன்பது இழைகளால் ஆன நோன்புச் சரடை வைக்க வேண்டும். முதலில் விநாயகப் பெருமானை வழிபட்ட பிறகே, மகாலட்சுமிக்கான பூஜையைத் தொடங்க வேண்டும். அன்னைக்கு மலர்கள் தூவி, தீபாராதனை காட்டி, லட்சுமி தோத்திரங்களைப் பாடி பக்தி பரவசத்துடன் வழிபட வேண்டும்.
பூஜை முடிந்ததும், மகாலட்சுமியிடம் வைத்த நோன்புச் சரடைப் பெண்கள் தங்கள் கணவன் கையால் மணிக்கட்டில் கட்டிக் கொள்வது வழக்கம். இதனால் தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். திருமணமாகாத பெண்களும் நல்ல கணவன் அமைய இந்த நோன்பைச் நோற்கலாம். அன்றைய தினம் அன்னைக்குப் படைக்கப்பட்ட நைவேத்தியங்களை வீட்டிற்கு வருபவர்களுக்கும் ஏழை எளியவர்களுக்கும் வழங்குவது மிகுந்த புண்ணியத்தைத் தரும்.
