உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆவணி மூலத்திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இறைவனின் திருவிளையாடல் லீலைகள் தினமும் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், உற்சவத்தின் 3-ம் நாளான இன்று சுந்தரேஸ்வரர் ‘மாணிக்கம் விற்ற லீலை’ அலங்காரத்தில் பிரியாவிடையுடனும், மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

புராண வரலாற்றின்படி, மதுரையை ஆண்ட வீரபாண்டிய மன்னன் வேட்டையாடச் சென்றபோது புலி தாக்கி உயிரிழந்தான். அந்தச் சமயத்தைப் பயன்படுத்தி, மன்னனின் காமக்கிழத்தியரின் பிள்ளைகள் அரண்மனையிலிருந்த சகல செல்வங்களையும், அரசுக்குரிய மணிமகுடத்தையும் கவர்ந்து சென்றனர். இதனால் நாட்டின் இளவரசனுக்கு முடிசூட்ட முடியாமல் அமைச்சர்கள் கவலையடைந்தனர்.

இழந்துபோன மணிமகுடத்திற்குப் பதிலாகப் புதிய மகுடம் செய்ய என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த அமைச்சர்கள், மதுரை சோமசுந்தர பெருமானிடம் சென்று முறையிட்டனர். அப்போது, இறைவனே ஒரு நவரத்தின வியாபாரியாக உருவெடுத்து அரண்மனைக்கு வந்தார். அவர் புதிய மணிமகுடம் செய்வதற்குத் தேவையான விலைமதிப்பற்ற நவமணிகளைக் கொடுத்தார்.

மேலும் அந்த மணிகளின் சிறப்புகள், குணங்கள் மற்றும் அவற்றை யார் அணிய வேண்டும் என்ற விவரங்களையும் விளக்கிக் கூறினார். பின்னர் இளவரசனுக்குப் புதிய மணிமகுடத்தைச் சூட்டி, அவருக்கு ‘அபிஷேக பாண்டியன்’ எனப் பெயரிடுமாறு கூறிவிட்டு இறைவன் மறைந்தார். இறைவனின் அருளால் களவுபோன செல்வங்களும் மீண்டும் கிடைக்கப்பெற்று நாடு நலம் பெற்றது.

இந்த அற்புத லீலையைக் காண ஏராளமான பக்தர்கள் கோவிலில் குவிந்து சுவாமி தரிசனம் செய்தனர். ஆவணி மூலத்திருவிழாவின் தொடர்ச்சியாக, நாளை (ஆகஸ்ட் 19) இறைவனின் புகழ்பெற்ற ‘தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை’ உற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளது.