மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவரும், ஐபிஎல் (IPL) தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடும் 23 வயதான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுமான அபிஷேக் போரல் மீது, கர்நாடகாவைச் சேர்ந்த மருத்துவ மாணவி ஒருவர் திருமண ஆசை காட்டி பாலியல் உறவு வைத்திருந்ததாக மேற்கு வங்கத்தின் ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள மோக்ரா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், அவரும் போரலும் கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு அவர்களுக்குள் பிரச்சினைகள் எழுந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், திருமண வாக்குறுதி அளித்து பாலியல் உறவு கொண்டது, தாக்குதல் நடத்தியது மற்றும் மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட தீவிரமான குற்றச்சாட்டுகளை அவர் தன் தாயாருடன் வந்து போலீசாரிடம் முன்வைத்துள்ளார். இது குறித்து அறிந்த ஹூக்ளி காவல் கண்காணிப்பாளர் குனார் பூஷன் சிங், குற்றப்பிரிவு டிஎஸ்பி அபிஜித் சிங் மொஹபத்ரா மற்றும் பொறுப்பு அதிகாரி சௌமென் பிஸ்வாஸ் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி, வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

தற்போது பெங்களூருவில் இருக்கும் கிரிக்கெட் வீரர் அபிஷேக் போரல் தன் மீதான இந்த குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “நான் இப்போது நன்றாக விளையாடி வருவதால் இதுபோன்ற பல்வேறு விஷயங்கள் கிளம்புகின்றன” என்று தெரிவித்துள்ளார். மேலும், ஐபிஎல் சீசன் முடிவடைந்ததில் இருந்து தான் குடும்ப விஷயங்களில் பிஸியாக இருந்ததாகவும், இதுவரை காவல்துறை தன்னைத் தொடர்பு கொள்ளவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காவல்துறை தங்களின் முதற்கட்ட விசாரணையை முடித்த பிறகு, இது குறித்து தான் இன்னும் விரிவாகப் பதிலளிப்பேன் என்றும் அவர் கூறியுள்ளார். பெங்கால் கிரிக்கெட் அணியின் வழக்கமான வீரரான அபிஷேக் போரல், சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக 4 போட்டிகளில் விளையாடி 108 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.