சினிமா உலகில் சைக்கோ த்ரில்லர் மற்றும் மர்மக் கதைகளுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான Barot House திரைப்படம் தற்போதும் பலரால் சிலிர்ப்புடன் பேசப்பட்டு வருகிறது. இயக்குனர் புக்ஸ் பார்கவ் கிருஷ்ணா இயக்கத்தில், அமித் சாத் மற்றும் மஞ்சுரி ஃபட்னிஸ் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படம், ஒரு சாதாரணக் குடும்பத்தில் நடக்கும் எதிர்பாராத அதிர்ச்சிகரமான திருப்பங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

படத்தின் தொடக்கத்தில் ஒரு மகிழ்ச்சியான குடும்பமாக வலம்வரும் இவர்களின் வாழ்க்கையில், அடுத்தடுத்து நிகழும் கொலைச் சம்பவங்கள் பெரும் புயலைக் கிளப்புகின்றன. குறிப்பாக, குடும்பத்தின் செல்ல மகள்கள் மர்மமான முறையில் கொல்லப்படுவதும், அதன் பின்னர் அயலவர் வீட்டின் குழந்தையும் பலியாவதும் கதையை வேறு ஒரு உச்சத்திற்கு எடுத்துச் செல்கிறது.

இந்தத் தொடர் கொலைகளுக்குப் பின்னால் இருக்கும் உண்மையான குற்றவாளி யார் என்ற கோணத்தில் நகரும் காவல்துறை விசாரணையில், அனைவரையும் பேரதிர்ச்சிக்குள்ளாக்கும் ஒரு பகீர் உண்மை வெளிச்சத்திற்கு வருகிறது.

விசாரணையின் முடிவில், ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் உலுக்கிய அந்தச் சீரியல் கில்லர் வேறு யாருமல்ல, மாறாக அந்தத் தம்பதியினரின் 9 வயது சிறுவன்தான் என்ற அதிர்ச்சிகரமான விஷயம் தெரியவருகிறது. IMDb தளத்தில் 7.2 மதிப்பீட்டைப் பெற்றுள்ள இந்தப் படம், வெறும் 3 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு ZEE5 ஓடிடி தளத்திலும், இலவசமாக யூடியூப்பிலும் காணக் கிடைக்கிறது. திகிலும் எதிர்பார்ப்பும் நிறைந்த இந்த 90 நிமிடத் த்ரில்லர் படம், சினிமா பிரியர்களைக் கட்டாயம் ஈர்க்கும் என்பதில் ஐயமில்லை.