இந்திய கிரிக்கெட் அணியின் இளம் நட்சத்திரமான வைபவ் சூர்யவன்ஷி தற்போது விளையாட்டு உலகில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளார். ஐபிஎல் தொடரில் அவர் வெளிப்படுத்திய சிறப்பான ஆட்டத்தின் மூலம், தற்போது சீனியர் இந்திய அணியில் அவர் இடம்பிடித்துள்ளார். விரைவில் அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் அவர் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாவார் என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இதற்கு முன்னதாக அவர் இந்தியா அண்டர்-19 மற்றும் இந்தியா ‘ஏ’ ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார். சமீபத்தில் தம்புள்ளாவில் நடைபெற்ற இலங்கை ‘ஏ’ அணிக்கு எதிரான போட்டியின் சூப்பர் ஓவரில், இந்திய ‘ஏ’ அணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இலங்கை வீரர்களுடன் வைபவ் சூர்யவன்ஷி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த நடத்தைக்காக ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் மத்தியில் அவர் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.

இந்த சர்ச்சை குறித்து தனது யூடியூப் பக்கத்தில் பேசியுள்ள இந்தியாவின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷிக்கு தனது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் எதனைப் பின்பற்ற வேண்டும் என்பதை வைபவ் தற்போதுதான் கற்றுக்கொண்டு வருகிறார் என்று கூறியுள்ள அஸ்வின், இந்த விவகாரத்தில் தேவைக்கு அதிகமாக விவாதிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், “நாம் வெறுப்புடன் பேசுவதால் என்ன சாதிக்கப் போகிறோம்? அந்த இளம் வீரரை உங்களால் எப்படி வெறுக்க முடிகிறது? அவரிடம் பக்குவத்தை எதிர்பார்க்கும் விமர்சகர்கள், அவனுடைய வயதையும் அனுபவத்தையும் முதலில் கருத்தில் கொள்ள வேண்டும். நாமும் ஒரு காலத்தில் குழந்தையாக இருந்தோம் என்பதையும், நம் குடும்பத்திலும் வைபவ் போன்ற குழந்தைகள் இருக்கிறார்கள் என்பதையும் மறந்துவிடக் கூடாது” என்று விமர்சகர்களுக்குக் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.