முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஹர்பஜன் சிங், பஞ்சாபில் போதைப்பொருள் புழக்கம் குறித்து சமூக வலைதளத்தில் பகிர்ந்த வீடியோ உண்மையில் வேறு மாநிலத்தில் எடுக்கப்பட்டது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சமூக வலைதளத்தில் பரவிய வீடியோ ஒன்றில், இரண்டு இளைஞர்கள் சாலையோரத்தில் போதையில் தள்ளாடியபடி நிற்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்த வீடியோவை தனது எக்ஸ் (X) பக்கத்தில் பகிர்ந்த ஹர்பஜன் சிங், “பஞ்சாபின் நிலைமையைக் காணும்போது மிகவும் வேதனையாக இருக்கிறது. பஞ்சாபும் அதன் இளைஞர்களும் இதைவிடச் சிறந்த எதிர்காலத்திற்கு உரியவர்கள்” என்று கவலை தெரிவித்திருந்தார். மேலும், இந்த விவகாரத்தை மூடி மறைக்காமல் வெளிப்படைத்தன்மையுடனும், அவசர நடவடிக்கையுடனும் கையாள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஹர்பஜன் சிங்கின் இந்தப் பதிவு இணையத்தில் வேகமாக பரவி விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், பஞ்சாப் காவல்துறை உடனடியாகத் தலையிட்டு அந்த வீடியோ குறித்த உண்மையை வெளியிட்டது.

இதுகுறித்து பஞ்சாப் போலீஸ் தரப்பில் வெளியிடப்பட்ட விளக்கத்தில், “பரவி வரும் இந்த வீடியோ பஞ்சாபில் எடுக்கப்பட்டதல்ல; இது ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீ கங்காநகர் பகுதியில் பதிவானது. இதற்கும் பஞ்சாப் காவல்துறைக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை” என்று தெளிவுபடுத்தப்பட்டது.

மேலும், வீடியோவில் பஞ்சாபி மொழி ஒலிக்கிறது என்பதற்காக எந்தவொரு சம்பவத்தையும் பஞ்சாபில் நடந்ததாக அனுமானிக்கக் கூடாது என்று பொதுமக்களையும் சமூக வலைதள பயனர்களையும் கேட்டுக் கொண்டனர். இதுபோன்ற தவறான மற்றும் சரிபார்க்கப்படாத தகவல்களைப் பகிர்வதற்கு முன்பு அதன் உண்மையான இடத்தையும், உண்மைகளையும் சோதித்துப் பார்க்க வேண்டும் என்றும், பொறுப்புடன் செயல்படுமாறு பதிவிட்டவர்களைப் போலீசார் எச்சரித்தனர்.