தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற பட்ஜெட் மீதான விவாதத்தின் போது, தவெக அரசின் நிதிநிலை அறிக்கையில் திமுக ஆட்சியின் திட்டங்களே ஜொலிப்பதாக திமுக எம்.எல்.ஏ.வுமான ஓ.பன்னீர்செல்வம் பேசியதுடன், அவையில் இடம்பெற்ற சுவாரசியமான அரசியல் விவாதங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் 3-வது நாளாக இன்று தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் பேசிய தி.மு.க. எம்.எல்.ஏ. ஓ.பன்னீர்செல்வம், தமிழக வெற்றிக்கழகம் தலைமையிலான அரசின் நிதிநிலை அறிக்கை கடுமையான ஏமாற்றத்தை அளிப்பதாக விமர்சித்தார். “செய்வதை மட்டும் தான் சொல்வோம் என்று கூறிவிட்டு அள்ளித்தெளித்த வாக்குறுதிகளை த.வெ.க. அரசு மறந்துவிட்டது. துறை ரீதியான கூட்டங்களும், அமைச்சரவை கூட்டமும் நடத்தப்பட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த நிதிநிலை அறிக்கை வெறும் பெயர் மாற்றப்பட்டியல் போல மட்டுமே உள்ளது” என்று அவர் குற்றம் சாட்டினார்.

மேலும் தனது உரையில், “பெண்களுக்கு உரிமைத் தொகை 2500 உயரவில்லை, 6 சிலிண்டர் போன்ற முக்கிய அறிவிப்புகள் வராததால் மகளிர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்கும் நிதி ஒதுக்கீடு திட்டங்கள் இல்லை. மாநிலம் முழுவதும் அனைத்து அரசு பேருந்துகளிலும் இலவச பயணம் என்ற திட்டம் அறிவிக்கப்படவில்லை. தவெக பட்ஜெட்டில் திருப்புகின்ற பக்கமெல்லாம் முந்தைய தி.மு.க. ஆட்சியின் திட்டங்களே ஜொலிக்கின்றன. புதிய அரசின் திட்டங்களை நான் தேடுகிறேன், தேடுகிறேன், தேடிக்கொண்டே இருக்கிறேன்” என்று கிண்டலாகப் பேசினார்.

 

ஓ.பி.எஸ்-ன் பேச்சுக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், “ஐந்து ஆண்டுகளுக்குள் சொன்னவற்றை நாங்கள் நிறைவேற்றுவோம். ஓ.பன்னீர்செல்வம் சொல்வது போல் மூன்று மாதத்தில் செய்து சரித்திரம் படைக்க முடியாது. நீங்கள் இடம் மாறி இருக்கிறீர்கள், பரவாயில்லை.. அதற்காக இவ்வளவு துதி பாடிப் பேச வேண்டிய அவசியமில்லை. மறைந்த முன்னாள் முதல்வர் அம்மாவால் 3 முறை முதல்-அமைச்சராக்கப்பட்ட ஓ.பி.எஸ் பேசுவதைப் பார்த்து நாடே சிரித்துக் கொண்டிருக்கிறது” என்றார். உடனே குறுக்கிட்ட ஓ.பி.எஸ், “முதலில் இடம் மாறியது செங்கோட்டையன் தான்” என்று பதிலடி கொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, “இடத்தை மாற்றியபோது, தன் இதயத்திற்கு அருகிலுள்ள நிழற்படத்தை மாற்ற வேண்டாம் என்று முதலமைச்சர் விஜய் கூறினார். ஜெயலலிதா இருந்த காலத்திலேயே முதலமைச்சராகப் பொறுப்பேற்ற ஓ.பன்னீர்செல்வம் தற்போது யார் படத்தை வைத்துள்ளார்?” என்று கேள்வி எழுப்பினார். மேலும் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், “பன்னீர்செல்வம் இடத்தை மட்டும் அல்ல, தன் இதயத்தையுமே மாற்றிவிட்டார்” என்றார்.

இதற்கு விளக்கமளித்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், “அண்ணா, ஜெயலலிதா, கலைஞர் என அனைவரும் என் இதயத்தில் தான் உள்ளனர். படம் வைத்து ஏமாற்ற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. தற்போது சட்டமன்ற உறுப்பினராக பேரவையில் நான் இருப்பதற்கு காரணம் மு.க.ஸ்டாலின், எனவேதான் அவர் படத்தை வைத்துள்ளேன். திராவிட இயக்கத்தை சுற்றித்தான் என் அரசியல் நிலைப்பாடு இருக்கும். நான் எப்படிப்பட்டவன் என்பது அனைவருக்கும் 200 சதவீதம் தெரியும்” என்றார்.

மேலும் தொடர்ந்த அவர், “பயிர்க்கடன் முழு தள்ளுபடி, பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த அறிவிப்புகள் பட்ஜெட்டில் வரவில்லை. கொடுத்த வாக்குறுதிகள் தற்போதும் தேர்தல் அறிக்கையிலேயே தூங்கிக் கொண்டிருக்கின்றன. கடன் வாங்காமல் 50 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்ய முடியாது என்கிறார் நிதித்துறை செயலாளர். தேர்தல் பிரசாரத்தில் பேசியது தவறு என்பதை தற்போதைய முதலமைச்சர் இப்போது உணர்ந்திருப்பார்” என்று கடுமையாக விமர்சித்தார். சட்டப்பேரவையில் படம் வைப்பது தொடர்பான நகைச்சுவையான விவாதமும், அதன் தொடர்ச்சியான காரசார விவாதங்களும் அவையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.