கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் எலத்தூரில், கடந்த ஜனவரி 24-ம் தேதி பட்டறை ஒன்றில் இளம்பெண் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். தொடக்கத்தில் இது தற்கொலை என்று கருதப்பட்டாலும், அந்தப் பட்டறையின் உரிமையாளர் வைஷாகன் அளித்த முன்னுக்குப் பின் முரணான பதில்களால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

சிசிடிவி காட்சிகள் மற்றும் தீவிர விசாரணையில், இது தற்கொலை அல்ல; காதலிப்பதாகக் கூறி அப்பெண்ணை நீண்டகாலமாகப் பாலியல் வன்கொடுமை செய்து வந்த வைஷாகன் நடத்திய திட்டமிட்ட கொலை என்பது அம்பலமானது.

திருமணமான வைஷாகன், தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்திய அந்தப் பெண்ணை ஏமாற்றித் தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார். “நம்மால் சேர்ந்து வாழ முடியாது, அதனால் சேர்ந்து சாகலாம்” என்று ஆசை வார்த்தை கூறி பட்டறைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு தூக்கிடும் நாடகத்தை அரங்கேற்றி, அந்தப் பெண் கயிற்றில் ஏறியவுடன் அவர் நின்றிருந்த ஸ்டூலை எட்டி உதைத்துக் கொலை செய்துள்ளார். தற்போது வைஷாகன் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அந்தப் பெண் சிறு வயதிலிருந்தே பாதிக்கப்பட்டதால் போக்சோ சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.