சென்னை திருவொற்றியூர் பெரியார் நகர் பகுதியில் வெங்கடேஷ்(28) என்பவர் வசித்து வருகிறார். கட்டிட தொழிலாளியான இவர் 10 வருடங்களுக்கு முன்பு அனுசியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அனுசியாவின் தம்பியின் நண்பரான முகேஷ் மனைவியை பிரிந்து கடந்த 3 மாதங்களாக அனுசியாவின் வீட்டில் தங்கி இருந்துள்ளார். அவரையும் தனது தம்பி என்று அனுசியா அழைத்து வந்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக கணவன் மற்றும் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முகேஷ், அனுசியா மற்றும் அவரது 2 குழந்தைகளையும் திருவெற்றியூர் தேரடி பகுதியில் உள்ள துணிக்கடை அழைத்துச் சென்று துணி வாங்கிக் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த வெங்கடேஷ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலைக்கு முன்பு வெங்கடேஷ் தனது மனைவிக்கு எழுதிய கடிதம் ஒன்று காவல்துறையினரிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தம்பி, தம்பி என்று சொல்லி என்னை ஒதுக்கி வைத்து விட்டாய் என் சாவுக்கு காரணம் முகேஷ் என்று எழுதி இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.