மத்திய வங்கக்கடல் பகுதி முதல் கடலோர கர்நாடகா வரை வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுவதன் காரணமாக, தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்குப் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஜூன் 10-ஆம் தேதியான இன்று திருநெல்வேலி மலைப்பகுதிகள், தேனி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். தொடர்ந்து, ஜூன் 11 அன்று கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களிலும், ஜூன் 12 அன்று திண்டுக்கல், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஜூன் 13 முதல் 16-ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட தமிழகப் பகுதிகளில் மிதமான மழை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தலைநகர் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த இரு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளதால் வெப்பம் சார்ந்த அசௌகரியங்கள் ஏற்படக்கூடும். மேலும், ஜூன் 14-ஆம் தேதி வரை தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே அதிகபட்சமாக 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.