ஆட்டு மண்ணீரல் என்றும் அழைக்கப்படும் ‘மட்டன் சுவரொட்டி’, உடலுக்குத் தேவையான பல்வேறு சத்துக்கள் நிறைந்த மிகச் சிறந்த உணவாகும். இதில் இரும்புச்சத்து, வைட்டமின் பி12, புரதம், போலேட் மற்றும் துத்தநாகம் ஆகியவை அதிக அளவில் காணப்படுகின்றன. குறிப்பாக ரத்த சோகையால்  அவதிப்படுபவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாகும். உடலின் ரத்த அணுக்களின் உற்பத்தியை வேகப்படுத்தி, ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து உடலுக்குத் தேவையான உடனடி ஆற்றலை இது வழங்குகிறது.

இத்தகைய மருத்துவக் குணம் கொண்ட சுவரொட்டி பொரியல் செய்ய தேவையான பொருட்கள்: 1/4 கிலோ சுவரொட்டி, 75 மி.லி. நல்லெண்ணெய், பட்டை (2), ஏலக்காய் (5), லவங்கம் (3), வரமிளகாய் (4), பெரிய வெங்காயம் (2), தக்காளி (1), இஞ்சி பூண்டு பேஸ்ட் (1.5 ஸ்பூன்), மஞ்சள்தூள் (1/4 ஸ்பூன்), மிளகாய்த்தூள் (1 ஸ்பூன்), மல்லித்தூள் (1/2 ஸ்பூன்), கரம் மசாலா மற்றும் மிளகுத்தூள் (1.5 ஸ்பூன்), தேவையான அளவு கொத்தமல்லி, புதினா, கருவேப்பிலை மற்றும் உப்பு.

செய்முறைக்கு முதலில் சுவரொட்டியை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், வரமிளகாய் சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, அதன் பச்சை வாசனை போனவுடன் சுத்தம் செய்த சுவரொட்டித் துண்டுகளையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

அடுத்து மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலா, மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கிய பின் தக்காளியையும் சேர்த்து வதக்க வேண்டும். பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி சுவரொட்டியை நன்கு வேகவிட வேண்டும். நீர் சுண்டி சுவரொட்டி நன்றாக வெந்ததும் கொத்தமல்லி, புதினா, கருவேப்பிலை தூவி 5 நிமிடங்கள் மூடி போட்டு ‘தம்மில்’ வைத்து இறக்கினால், நாவில் எச்சில் ஊறவைக்கும் சத்தான மட்டன் சுவரொட்டி பொரியல் தயார்!