சங்கரன்கோவில் அருள்மிகு கோமதி அம்மன் திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடித்தபசு திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். 12 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும் இத்திருவிழாவில், கொடியேற்றப்பட்ட நாளில் இருந்தே லட்சக்கணக்கான பக்தர்கள் திருக்கோயிலுக்கு வருகை தந்து அம்பாளைத் தரிசித்து வழிபாடுகளில் ஈடுபடுவர். இதில் பக்தர்கள் செலுத்தும் வழிபாடுகளிலேயே மிகவும் முக்கியமானது ‘ஆடிச்சுற்று’ நேர்த்திக்கடனாகும்.
சங்கரலிங்க சுவாமி, சங்கரநாராயண சுவாமி மற்றும் கோமதி அம்மன் சன்னதிகள் அமைந்த கோவில் வெளிப்பிரகாரத்தை பக்தர்கள் 101, 501, 1001 எனத் தங்கள் நேர்த்திக்கடனுக்கு ஏற்ப சுற்றி வருகிறார்கள். ஒரு காலில் நின்று தபசிருக்கும் அம்பாளின் கால் வலியைத் தாங்கள் ஏற்றுக்கொள்வதாகப் பக்தர்கள் ஆத்மார்த்தமாக நம்புகின்றனர். பக்தர்களின் இந்த பக்தியைக் கண்டு, அவர்களின் வாழ்க்கையில் உள்ள கஷ்டங்களையும் துயரங்களையும் கோமதி அம்மன் நீக்குகிறாள் என்பது நம்பிக்கை.
மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண் பெறவும், இளைஞர்கள் நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கவும், கன்னிப்பெண்கள் நல்ல வாழ்க்கைத்துணை அமையவும் ஆடிச்சுற்று சுற்றுகின்றனர். மேலும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவவும், முதியவர்கள் நோய்நொடியின்றி வாழவும் வேண்டிக்கொண்டு அனைத்து வயதினரும் இதில் பங்கேற்கின்றனர். இதன் காரணமாகவே ஆடிச்சுற்று சுற்றும் பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு பல்லாயிரக்கணக்கில் அதிகரித்து வருகிறது.
ஒரே நாளில் இந்தச் சுற்றுகளை முடிக்க முடியாது என்பதால், பல பக்தர்கள் சங்கரன்கோவிலிலேயே தங்கித் தங்களின் நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர். ஆடித்தபசு கொடியேற்றம் முதல் திருவிழா முடியும் வரை திருக்கோயில் பிரகாரம் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் அலைமோதும். ஆடிச்சுற்று சென்று கோமதி அம்மனை மனமுருகி வேண்டும் பக்தர்களின் நியாயமான அனைத்து ஆசைகளையும் அம்மன் நிச்சயம் நிறைவேற்றி அருள்வாள் என்பது தொன்றுதொட்டு வரும் ஐதீகம்.
