டெலிகிராம் செயலியில் “ஒரு பெண்ணுடன் உல்லாசமாக நேரம் செலவிட்டால் ரூ.5000 சம்பளம்” என்ற பெயரில் வேலைவாய்ப்பு வழங்குவதாகச் சொன்ன கும்பல், வேலைக்காக வந்த இளைஞரை ஏமாற்றி, ரூ.11,500 பணத்தை பறித்த சம்பவம் சென்னை அம்பத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தென் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வேலைக்காக சென்னைக்கு வந்து, அயப்பாக்கம் பகுதியில் தங்கியிருந்தார். சமூக வலைதளங்கள் மற்றும் டெலிகிராம் மூலம் வேலை தேடிய அவர், “கால் பாய்” வேலைவாய்ப்பு என ஒரு அழைப்பை பெற்றார். ஒரு நாளில் இரண்டு பெண்களை சந்தித்தால் ரூ.10,000 வரைக்கும் சம்பளமென கூறிய கும்பல், முதலில் பதிவு கட்டணம் என ரூ.500, பின்னர் மேலும் பணம் கேட்டுக்கொண்டே, மொத்தம் ரூ.11,500 வரை பெற்றுள்ளது.
கஸ்டமர் பெயரில் பெண்ணின் புகைப்படம், தொலைபேசி எண் தரப்பட்டும், பின்னர் தொடர்புகள் துண்டிக்கப்பட்டதால் ஏமாற்றத்தை உணர்ந்த இளைஞர், ஆவடி காவல் ஆணையம் செயல்படுத்தும் சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்துள்ளார்.
இந்த வகை மோசடிகள் டெலிகிராம், டேட்டிங் செயலிகள் மூலம் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் என போலீசார் எச்சரிக்கின்றனர். “ஓசியில் பணம் கிடைக்கும்” என நம்பி நடவடிக்கை எடுப்பதன் விளைவாக பலர் ஏமாறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
